சென்னை விமான நிலையத்தின் சர்வதேச சரக்கு முனையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்களில், சரக்கு பார்சல்கள் அனுப்பி வைக்கப் படுகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்படும் கார்கோ வளாகத்தில், பார்சல் ஒன்று கேட்பாரற்று, நீண்ட நேரமாக கிடந்தது. அதைப் பார்த்த பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் அந்தப் பார்சலில் வெள்ளை நிற பவுடர் இருந்தது. அந்த பார்சலில் மருத்துவ ரசாயன பவுடர் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பார்சலில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண் மற்றும் முகவரியை தொடர்பு கொண்ட போது அவை அனைத்தும் போலி என்று தெரிய வந்தது.

இதையடுத்து அந்த பவுடரை சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். ஆய்வில், அந்தப் பவுடர், போதைப்பொருள் என்று தெரியவந்தது. பார்சலில் இருந்த 5 கிலோ போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 5 கோடி ரூபாயாகும். பின்னர் இது குறித்து கார்கோ சுங்கத்துறை அதிகாரிகள், அந்த போதைப்பொருள் பார்சலை பறிமுதல் செய்ததோடு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருளை அனுப்பியவர்கள் குறித்த தகவல்களை ரகசியமாக போதைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “வெளிநாட்டுக்கு இந்தப் போதைபொருளை, சரக்கு விமானத்தில் அனுப்பி வைக்க போதை கடத்தல் கும்பல் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் சுங்கச் சோதனை தீவிரமாக இருந்ததால் பார்சலை அங்கேயே விட்டு விட்டு அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பியிருக்க வாய்ப்புள்ளது. அதனால் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்”‘ என்றனர்.