சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கோவை மாநகராட்சியின் முதல் மாதாந்திர கூட்டம் இன்று மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த கோவை மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர்கள், முதல்வர் விஜய் படத்துடன், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது காங்கிரஸ் கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர் காமராஜர் படத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தியதால், தி.மு.க – காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தி.மு.க கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை தூக்கி கொண்டு வந்து முழக்கமிட்டபடி, அதை மாமன்ற கூட்ட அரங்கில் மாட்ட முயன்றனர். அப்போது காங்கிரஸ் கட்சியினரும் காமராஜர் படத்தை தூக்கி கொண்டு வரவே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது தி.மு.க-வினர், “காங்கிரஸ் துரோகிகள் ஒழிக , காங்கிரஸ் ஒழிக” என முழக்கம் எழுப்பினர். மேலும், ”மாமன்ற கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியே வெளியேறு” எனவும் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த சூழலில் கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினார். மேலும் தமிழக அரசு ஆணைப்படி முன்னாள் முதல்வர் புகைப்படம் மாட்டலாம் என இருக்கின்றது எனவும், எனவே முன்னாள் முதல்வர் புகைப்படம் மாட்டலாம் எனவும் அறிவித்ததால், இரு தரப்பினரும் சமரசமாகினர்.