செப்.,9ல் கூட்டணி கட்சி கூட்டம்… டாப் 3 முடிவுகளை எடுக்கப்போகும் தவெக..? – Kumudam

Spread the love

சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஜ, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் கூட்டணியை வலுப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை தவெக திட்டமிட்டு வருவதாகவும், இதில் முதற்கட்டமாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி கோவளத்தில் தோழமை கட்சிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டம்  முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இக்கூட்டத்தில், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காத நிலையில், 2ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் தலைமையில் வருகின்ற 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தோழமைக் கட்சித் தலைவர்களை ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகிய அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோரைச் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச்செயலாளர் வீரபாண்டியனை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் வீரபாண்டியன் கூறும்போது, ‘‘தவெக தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் நடந்த முதல்கட்ட ஆலோசனையில் நாங்கள் பங்கேற்க இயலாததால், முதலமைச்சரைச் சந்தித்து தெளிவுபடுத்தினோம். இப்போதும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். தற்போது வரை அமைச்சரவையிலும் கூட்டணியிலும் இடம் பெறுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் மாநிலத்தை ஆளும் அரசியல் கட்சி, தனது கருத்துகளை முன்வைக்கும்போது அதற்கு மதிப்பளித்து, எங்களது கட்சி தலைமையிடம் அதை தெரிவிப்போம்” என்றார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் குழு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த போது, கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பதாக வைகோ உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர்கள் குழு தொடர்ந்து விசிக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களையும் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளனர். இரண்டாவது முறையாக தோழமை கட்சிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில் கூட்டணியின் பெயர், ஒருங்கிணைப்பாளர் யார் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வருகின்ற 9 ஆம் தேதி  நடைபெறவுள்ள தவெக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் அதிரடியான மூன்று முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

முக்கியமாக தவெகவின் தலைமையிலான கூட்டணியின் பெயர் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும்,  பிரதமர் வேட்பாளர்  விவாகரத்தில் தவெக-காங்கிரஸ் உறவில் ஏற்பட்டுள்ள உரசல் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் அது குறித்தும் பேச வாய்ப்புள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கூட்டத்தில் வேற என்ன  முடிவுகள் எடுக்கப்படும், கூட்டணிக் கட்சிகளின் பதில் என்னவாக இருக்கும் என்பது செப் 9 ல் பொறுத்திருந்து பார்போம்.

 

 

 

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *