செயற்கை கருத்தரிப்பு மைய குளறுபடியால் மாறிய கரு? "பிறந்தது எங்கள் குழந்தைகள் அல்ல" – தம்பதி புகார்

Spread the love

டெல்லி அருகில் உள்ள குருகிராமைச் சேர்ந்த தம்பதியான ராகுல் மற்றும் மீனு தம்பதி செயற்கை முறையில் (Vitro Fertilisation) குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.

இதற்காக டெல்லியில் உள்ள டாக்டர் கைலாஷ் கருத்தரிப்பு மைய கிளினிக்கில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தச் சிகிச்சை தொடங்கியது. மேலும், தம்பதிகளின் விந்து மற்றும் கருமுட்டையைப் பயன்படுத்தி கரு உருவாக்கப்படும் என்று அவர்களுக்கு டாக்டர்கள் உறுதியளித்தனர்.

கடந்த ஆண்டு மே 14-ஆம் தேதி, அந்தப் பெண்ணின் கருப்பையில் கரு செலுத்தப்பட்டது.

கடந்த ஜனவரி 5-ஆம் தேதி, மீனுவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் குழந்தைகள் தங்கள் இருவரை ஒத்து இல்லை என்று அத்தம்பதி கருதினர். இதனால் குழந்தை உண்மையிலேயே தங்களுக்குப் பிறந்ததுதானா என்பதைத் தெரிந்து கொள்ள அத்தம்பதி இரண்டு குழந்தைகளுக்கும் டி.என்.ஏ.பரிசோதனை நடத்தினர்.

Baby
Baby

இந்தச் சோதனையில் ராகுல், மீனு தம்பதியின் டி.என்.ஏ.வுடன் குழந்தைகளின் டி.என்.ஏ. ஒத்துப்போகவில்லை. இதனால் மீனுவின் கர்ப்பபையில் செலுத்தப்பட்ட கரு வேறு தம்பதிக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்து மீனு கூறுகையில், ”நான் என் குழந்தையைத் தேடிக்கொண்டிருப்பது போலவே, என்னிடம் இருக்கும் அந்தக் குழந்தையின் தாயும் அதற்காக ஏங்கிக்கொண்டிருப்பார். என்னால் குழந்தைகளுக்குச் சரியாக தாய்ப்பால் கூட ஊட்ட முடியவில்லை.

எங்களது குழந்தை இல்லை என்றாலும் அவற்றைச் சிறப்பாகக் கவனித்து வருகிறோம்” என்றார்.

இது குறித்து ராகுலும் அவரது மனைவியும் போலீஸில் புகார் செய்துள்ளனர். இது குறித்து ராகுல் கூறுகையில், ”இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். ஐவிஎஃப் பதிவுகள், கரு தொடர்பான ஆவணங்கள், ஆய்வகப் பதிவுகள், மின்னணு தரவுகள் மற்றும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆகியவை ஆய்வுக்காகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

முதல் மூன்று மாதங்களாக போலீஸார் வழக்கு கூட பதிவு செய்ய மறுத்தனர். நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே, இறுதியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அடுத்த நாளே விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டதால், அது உடனடியாக விசாரிக்கப்படாமல் இருக்கிறது.

கோர்ட் உத்தரவிட்ட பிறகும் மருத்துவமனையில் இருந்து போலீஸார் ஆவணங்களைப் பறிமுதல் செய்யாமல் இருக்கின்றனர். நாங்கள் எந்த மருத்துவமனையையும் குறை சொல்ல விரும்பவில்லை. எங்களது குழந்தை எங்களுக்கு வேண்டும்” என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *