செல்போனால் வந்த வினை! அக்காவை போட்டுதள்ளிய கொடூர தம்பி!   – Kumudam

Spread the love

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.  இவரது மூத்த மகள் ராமலட்சுமி (23) நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகன் கோயம்புத்தூரிலும், மூன்றாவது மகன் முத்துகிருஷ்ணன் (21) நாங்குநேரி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சுத்தமல்லி பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு அக்கா – தம்பி ஆகிய இருவரும் வருகை புரிந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து ராமலட்சுமி எப்போதும் செல்போனை பயன்படுத்தி வந்திருக்கிறார். மேலும், தனியாக நின்று பேசிக் கொண்டும் இருந்திருக்கிறார். இதனை கண்ட முத்துகிருஷ்ணன் ராமலட்சுமியை தொடர்ச்சியாக கண்டித்துள்ளார். ஆனால் ராமலட்சுமியோ இதனை கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முத்துக்கிருஷ்ணன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தன் அக்காவான ராமலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராமலட்சுமியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அப்போது ராமலெட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து ராமலட்சுமி தாயார் கண்ணகி அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், செல்போன் பயன்படுத்தியதால் தம்பியே அக்காவை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *