
ராகுகாலம் முடிந்ததும் வருகிற பிரதோஷத்தின் போது வழிபட்டால்,சிவபெருமானின் அருளைப் பூரணமாகப் பெறலாம். வளமும் நலமும் தந்து வாழவைப்பார் சிவனார்! செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்பார்கள். மங்கல வாரத்தில் பிரதோஷ பூஜையைத் தரிசிப்பது மங்காத செல்வங்களைத் தரும் என்கிறார்கள் சிவனடியார்கள்.
சிவ வழிபாட்டில் மிக மிக முக்கியமானது பிரதோஷ வழிபாடு. திரயோதசி எனும் திதி நாளில் வருகிற பிரதோஷம் வரும். அந்தநாளில், மாலைவேளையில் சிவாலயத்துக்குச் சென்று நந்திதேவரையும் சிவபெருமானின் லிங்கத் திருமேனியையும் தரிசிப்பது, நம் பாவங்களைப் போக்கும், புண்ணியங்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்!
சிவ வழிபாடுகளில் சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் என பல உள்ளன. இவற்றில் பிரதோஷ வழிபாடும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறது சிவபுராணம். பொதுவாகவே மற்ற விழாக்களின் போது சிவலிங்கத் திருமேனிக்கு சிறப்புற அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆனால் பிரதோஷ நன்னாளில், நந்திதேவருக்கும் சேர்த்து அபிஷேகங்கள் விமரிசையாக நடந்தேறும்.
பால், தயிர், பச்சரிசி மாவு, தேன், சந்தனம், பன்னீர் முதலான 16 வகையான திரவியங்களைக் கொண்டு நந்திதேவருக்கும் சிவனாருக்கும் பிரதோஷ பூஜை நடைபெறும். பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில்தான் எல்லா சிவன் கோயில்களிலும் அபிஷேகங்கள், சிவபாராயணங்கள், பதிகங்கள் பாராயணம் செய்து பூஜித்தல் முதலானவை நடைபெறும்.
மாலை வேளையில், நந்திதேவருக்கு அருகம்புல், வில்வ இலை, பூக்கள் வழங்கி ஆராதனைகள் செய்யலாம். அதேபோல், விபூதி, பால், தயிர் முதலான திரவியங்களை வழங்கி பிரார்த்தனை செய்யலாம்.
செவ்வாய்க்கிழமை 8ம் தேதி பிரதோஷம். முருகனுக்கு உகந்த நாள் என்று செவ்வாய்க்கிழமையைச் சொல்லுவோம். அம்மனுக்கு உகந்த நாளாகவும் செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. துர்கையை செவ்வாய் வெள்ளிகளில் எலுமிச்சை தீபமேற்றி, செவ்வரளி மலர் சார்த்தி வேண்டிக்கொள்வது துஷ்ட சக்தியைப் போக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஜாதக ரீதியாக மங்கல காரியங்களில் தடைப்பட்டுக்கொண்டே இருக்கிறவர்கள், தொழில், வேலை என எதிர்ப்புகள் சூழ்ந்து இன்னல்படுத்திக்கொண்டே இருக்கிறதே… என வருந்துபவர்கள், ஞானமும் யோகமும் கிடைக்க தென்னாடுடைய சிவனருள் மனமிரங்க மாட்டானா என ஏங்கிக்கொண்டிருப்பவர்கள், செவ்வாய்க்கிழமையன்று வருகிற பிரதோஷத்தில், பிரதோஷ நேரத்தில், நந்திதேவரையும் சிவபெருமானின் லிங்க மூர்த்தத்தையும் வழிபட்டு, அப்படியே முருகக்கடவுளையும் துர்கையையும் கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்துவந்தால் மங்காத செல்வம் கிடைக்கப்பெறலாம்; மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும் என்பது உறுதி என்கிறார் உப்பிலியப்பன் குருக்கள்.
தோஷங்களில் இருந்து விடுவித்து சந்தோஷத்தைத் தந்தருளும் செவ்வாய்ப் பிரதோஷ வழிபாட்டைச் செய்வோம். செம்மையுற வாழ்வோம்!
– வி.ராம்ஜி