இந்தியாவில் மனிதக் கடத்தலைத் தடுக்கவும், வணிக ரீதியான பாலியல் சுரண்டலை ஒடுக்கவும் “இம்மோரல் டிராஃபிக் (தடுப்பு) சட்டம்’ நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்தச் சட்டத்தின் விதிகள் (குறிப்பாகப் பிரிவு 17) காவல் துறையினரால் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. சட்டவிரோத பாலியல் விடுதிகள் மீது காவல்துறை நடத்தும் சோதனைகளின்போது, கடத்தப்பட்டுத் துயரப்படும் பாதிக்கப்பட்ட பெண்களோடு சேர்த்து, சொந்த விருப்பத்தின் பேரில் அத்தொழிலில் ஈடுபடும் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக மறுவாழ்வு இல்லங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக, புகார்கள் எழுந்தன.

இத்தகையச் சூழலில், தாங்களாகவே இத்தொழிலைத் தேர்ந்தெடுத்த வயது வந்த நபர்களின் உரிமையும், தனிமனித சுதந்திரமும் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, இந்த நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விரிவாக விசாரணை செய்தது. விசாரணையின் போது, ஐ.டி.பி.ஏ (ITPA) சட்டத்தின் 17-வது பிரிவு நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து நீதிபதிகள் கடும் கவலை தெரிவித்தனர்.