
வீட்டுக்கடன் என்பது இப்படி இருக்க, சிலர் தங்கள் வாழ்க்கையில் மிக மிகத் தாமதமாக வீடு வாங்கும் முடிவினை எடுக்கின்றனர். அதாவது, 45 வயதுக்குப் பிறகு வீடு வாங்குவதற்காக 50 லட்சம் ரூபாய், 60 லட்சம் ரூபாய் எனக் கடன் வாங்குகின்றனர். இவர்களால் கஷ்டப்பட்டாவது கடன் தொகையைக் கட்டிவிட முடியும் என்கிற நம்பிக்கை வங்கிக்கு இருக்கும்போது கடன்தாரர் கேட்கும் தொகையை வங்கிகள் தந்துவிடுகின்றன.
இப்படிக் கடன் வாங்கும்போது, வாங்கிய கடன் தொகை முழுவதையும் ஓய்வு பெறுவதற்குள், அதாவது 60 வயதுக்குள் செலுத்தி முடித்துவிடுகிறோமா என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். கடன்தாரர் அரசு ஊழியராக இருக்கும்பட்சத்தில் அவர் ஓய்வு பெற்றபிறகு பென்ஷன் என்கிற வகையில் ஒரு தொகை கிடைக்கும். அந்த பென்ஷன் தொகையில் இருந்து, குறிப்பிட்ட தொகையை வீட்டுக்கடனாகக் கட்டிவிடுவார்கள் என்பதை எதிர்பார்த்து அவர்களுக்கான கடனை 65 முதல் 70 வயது வரை தருகின்றன.
வீட்டுக்கடனை முழுவதுமாகக் கட்டிமுடிக்க வங்கிகள் இந்த அளவுக்குக் காலநீட்டிப்பைத் தந்தால், கடன் வாங்குபவர்கள் அதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. காரணம், 60 வயதில் ஒருவர் ஓய்வு பெற்றுவிட்டால், அவருடைய சம்பளம் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிடும். அந்த சம்பளத்தை வைத்து ஒருவர் அன்றாடச் செலவுகளை செய்து சமாளிப்பதற்கே சரியாக இருக்கும் என்கிற நிலையில், 60 வயதுக்குப் பிறகு வீட்டுக்கடனைத் திரும்பக் கட்ட சம்மதிப்பது சரியான விஷயமாக இருக்காது.
ஒருவேளை, 60 வயதுக்குப் பிறகு கடன்தாரரால் வீட்டுக்கடன் இ.எம்.ஐ தொகையைக் கட்டமுடியாமல் போனால், அந்த வீட்டை வேறு யாருக்காவது விற்றுவிட்டு, கடன் பணத்தை அசலும் வட்டியுமாக எடுத்துக்கொண்டுவிட்டு, மீதமுள்ள பணத்தைக் கடன்தாரருக்குத் தந்துவிடும்! கடன்தாரர் இத்தனை நாளும் கஷ்டப்பட்டு வீட்டுக்கடனைத் திரும்பக் கட்டிவந்தது வீட்டை விற்பதற்காக அல்ல. வீட்டைத் தொடர்ந்து வைத்திருக்கத்தான்.
ஆக, 45 அல்லது 50 வயதுக்குமேல் வீட்டுக்கடனாக பெரிய தொகையைக் கடனாக வாங்கக் கூடாது. எவ்வளவு பணத்தை வீட்டுக்கடனாக வாங்கினாலும் அதை 60 வயதுக்குள் அதாவது ஓய்வு பெறுவதற்குள் முழுவதுமாகத் திரும்பக் கட்டிமுடித்துவிட வேண்டும். 60 வயதுக்குள் கடன் தொகையைத் திரும்பக் கட்டுகிற மாதிரியான ஒரு கட்டாயத்துக்குள் இருக்கவே கூடாது.
வீட்டுக்கடன் தரும்போது வங்கிகள் இந்த விஷயத்தைக் கவனிக்கிறதோ இல்லையோ, கடன் வாங்குபவர்கள் இந்த விஷயத்தை நிச்சயம் கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்காமல், வீட்டுக்கடன் தரும்போது வேண்டாம் என்று ஏன் சொல்வானேன்? வீட்டுக்கடனை முழுவதுமாகத் திரும்பக் கட்டுவதைப் பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து வாங்குபவர்கள், பிற்பாடு மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பது நிச்சயம்! அந்தத் தவறை யாரும் செய்யக் கூடாது என்பதை வீட்டுக்கடன் வாங்குபவர்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்!