சனிக்கிழமை ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்தியாளர்களின் கேமராக்கள் பறிக்கப்பட்டு, அவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தலைநகரில் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரே பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் எம்.பி பிரியாங்கா காந்தி, “ஜந்தர் மந்தரில் செய்திகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். பல பத்திரிகையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தும், இது தொடர்பாக எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்படவில்லை.
உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களும், காவல்துறையினர் தங்களிடம் மிகவும் கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டுகின்றனர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினரே பெண்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றனர்.
கல்லூரி மாணவிகள் முதல் பத்திரிகையாளர்கள் வரை, பெண்கள் எல்லா இடங்களிலும் பாதுகாப்பற்ற சூழலையே எதிர்கொள்கின்றனர். மோடி அவர்களே, அமித் ஷா அவர்களே, பெண்களை நடத்துவதற்கு இதுதான் சரியான முறையா? இல்லையென்றால், ஏன் இது குறித்து நீங்கள் கவனம் செலுத்தவில்லை?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.