விஜய்யின் “ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால், படத்திற்குச் சென்சார் கிடைக்கத் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது.
இன்று வரை அப்படத்திற்குச் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கூடிய விரைவில் ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் சான்றிதழ் பெற்றுவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு ‘ஜனநாயகன்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன. அதனைத் தொடர்ந்து முழு படமும் இணையத்தில் நல்ல பிரிண்டில் லீக் ஆனது.
அந்த கசிந்த பதிப்பில் ‘Edit Ref’ என வாட்டர்மார்க் போடப்பட்டிருந்ததால், ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்ததற்கு அப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் E. ராகவ்தான் காரணம் என இணையத்தில் பேசப்பட்டது.
ஆனால், அதன் பிறகு, ‘ஜனநாயகன்’ லீக் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், படம் கசிந்ததற்குப் பிரதீப் காரணம் கிடையாது எனத் தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர்கள் சங்கம் விளக்கமளித்திருந்தது. ஆனால், இன்று அவரை அச்சங்கத்திலிருந்து இடைநீக்கம் செய்திருக்கிறார்கள்.