தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, த.வெ.க எம்.எல்.ஏ, “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் இளைஞர்களை சீரழிக்கும் இடம். ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு செலவிட்ட ரூ.50 கோடியை மூடப்பட்ட சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க பயன்படுத்தியிருக்கலாம்” எனப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், அதிமுக-வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது. சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்?