இத்தாலியின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர் ஜார்ஜியா மெலோனி (Giorgia Meloni). 2022-ம் ஆண்டு இத்தாலியின் பிரதமராகப் பதவியேற்ற இவரது வாழ்க்கை, பல சவால்களும், போராட்டங்களும், சுவாரசியங்களும் நிறைந்தது. அவரது சுயசரிதையான I AM GIORGIA: My Roots, My Principles புத்தகத்தில் அவரது வாழ்வில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களைச் சொல்லியுள்ளார். அதில் சில இங்கே…

தந்தை செய்த துரோகமும், தீயில் கருகிய வீடும்
ஜார்ஜியா மெலோனியின் குழந்தைப் பருவம் மிகவும் சவாலாக இருந்துள்ளது. அவர் ஒரு வயது குழந்தையாக இருந்தபோதே, அவரது தந்தை பிரான்செஸ்கோ மெலோனி குடும்பத்தை விட்டுப் பிரிந்து கேனரி தீவுகளுக்குச் சென்றுவிட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் வாழ்ந்த வீடும் ஒரு தீ விபத்தில் எரிந்து நாசமானது.
அதன் பிறகு, ரோம் நகரில் உள்ள கர்பாடெல்லா என்ற ஏழைத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு அவரது தாய் அன்னா பாரடோரே தன் மகள்களுடன் குடிபெயர்ந்தார். குடும்பத்தை வறுமையில் விட்டுச் சென்ற மெலோனியின் தந்தை, பின்னர் ஸ்பெயினில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். தந்தை இல்லாத அந்த வலியும் வறுமையும்தான், மெலோனியை சிறு வயதிலேயே ஒரு போராளியாக மாற்றியது என குறிப்பிட்டுள்ளார்.
“நீ ரொம்ப குண்டா இருக்க!” – அரசியலுக்கு வித்திட்ட சம்பவம்
சிறு வயதில் மெலோனி சற்று உடல் பருமனுடன் இருந்தார். ஒருமுறை கடற்கரையில் சில சிறுவர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். மெலோனியும் அவர்களுடன் விளையாடச் சென்றார். ஆனால் அந்தச் சிறுவர்கள், “நீ ரொம்ப குண்டாக இருக்கிறாய், உன்னால் விளையாட முடியாது” என்று கூறி அவரை விளையாட விடாமல் துரத்திவிட்டனர்.
இந்தச் சம்பவம் அவரை மிகவும் காயப்படுத்தியது. தன்னைக் கேலி செய்தவர்கள் முன்பு வாழ்க்கையில் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்குள் பிறந்தது. தன்னைத் தனிமைப்படுத்திய சமூகத்திற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற உந்துதலின் விளைவாகவே, அவர் தனது 15-வது வயதில் வலதுசாரி இளைஞர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.

அவமானப்படுத்த உருவான பாடல் `ஹிட்’ ஆன கதை
2019-ம் ஆண்டு ரோம் நகரில் நடந்த ஒரு மாநாட்டில் மெலோனி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றினார். அதில், “நான் ஜார்ஜியா, நான் ஒரு பெண், நான் ஒரு தாய், நான் இத்தாலியக் குடிமகள், நான் ஒரு கிறிஸ்தவப் பெண்!” என்றெல்லாம் முழங்கினார்.
அவரது இந்தப் பேச்சை கேலி செய்வதற்காக, மிலன் நகரைச் சேர்ந்த இரண்டு டிஜேக்கள் அந்த உரைக்கு இசையமைத்து ஒரு `டெக்னோ ரீமிக்ஸ்’ பாடலை இணையத்தில் வெளியிட்டனர். அவரை ஒரு மோசமான அரசியல்வாதியாகச் சித்திரிப்பதே அவர்களின் நோக்கம். ஆனால், நடந்தது வேறு! அந்தப் பாடல் இசை மிகவும் துள்ளலாக இருந்ததால், இத்தாலி முழுவதும் உள்ள இரவு விடுதிகளில் அது மிகப்பெரிய ஹிட்டானது. தன்னை அவமானப்படுத்த உருவாக்கப்பட்ட பாடலே, தன்னை இளைஞர்கள் மத்தியில் ஒரு அடையாளமாக மாற்றிவிட்டது என மெலோனி வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.
பேண்டஸி கதைகளின் தீவிர ரசிகை
பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தீவிரமான இலக்கியங்கள் அல்லது வரலாற்றுப் புத்தகங்களைப் படிப்பார்கள். ஆனால் ஜார்ஜியா மெலோனி ஒரு தீவிரமான ஃபேன்டஸி கதைகளின் ரசிகை. ஹாலிவுட் திரைப்படமான தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் கதைகளை எழுதிய J.R.R. டோல்கியனின் மிகப் பெரிய ரசிகை இவர்.
மேலும், தி நெவர் எண்டிங் ஸ்டோரி என்ற புகழ்பெற்ற கற்பனைக் கதையில் வரும் ஹீரோவான `அட்ரேயு’ என்பவரின் பெயரையே, தனது கட்சியின் அரசியல் மாநாட்டிற்குப் பெயராக வைத்துள்ளார்.

39-வது பிறந்தநாளில் கிடைத்த `சர்ப்ரைஸ்’
அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, தாய்மை குறித்து மெலோனி தனது புத்தகத்தில் மிகவும் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். தனது 39-வது பிறந்தநாளில், நண்பர்கள் மற்றும் அவரது துணைவர் ஆண்ட்ரியா ஏற்பாடு செய்திருந்த சர்ப்ரைஸ் பார்ட்டிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போதுதான், தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் அறிந்தார். பார்ட்டிக்குச் சென்ற அவர், தனது சகோதரி அரியன்னாவிடம் ரெஸ்ட்ரூமில் வைத்து இந்த மகிழ்ச்சியான செய்தியை ரகசியமாகப் பகிர்ந்துகொண்டார்.
“நான் சிறு வயதிலேயே தாயாகியிருக்க வேண்டும். அரசியலுக்காகத் தாய்மையைத் தள்ளிப்போட்டது தவறு. குழந்தைகள் தான் தூய்மையான அன்பு” என்று மனம் திறந்துள்ள மெலோனி, தனது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கும், நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும் இடையே தான் பட்ட சிரமங்களையும், தூக்கமில்லாத இரவுகளையும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

2008-ம் ஆண்டு தனது 31-வது வயதில் இத்தாலியின் மிக இளம் வயது அமைச்சராகப் பொறுப்பேற்று, பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இத்தாலியின் உயரிய பதவியில் நிற்கிறார். வலதுசாரி அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக அவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல தடைகளைத் தாண்டி வலிமையான தலைவராக அவர் உருவெடுத்த விதம் பலருக்கும் உத்வேகம் தரும்.