சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவையும், பென் டிரைவரையும் கொடுத்தார். அதன் அடிப்படையில் தொழிலதிபரும் ஜெம் கிராணைட் குழுமத்தின் தலைவரான வீரமணியை சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
வீரமணிக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரின் தோழியான சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெம் வீரமணியை போலீஸ் காவலில் எடுத்து சென்னை போலீஸார் விசாரித்தனர்.
வீரமணிக்கு 84 வயதாகுவதால் அவரை புழல் சிறையிலேயே வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீஸார் சிறப்பு அனுமதி பெற்றனர். அதைத் தொடர்ந்து புழல் சிறையிலேயே வைத்து வீரமணியிடம் துணை கமிஷனர் கீதாஞ்சலி, உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட தொழிலதிபர் வீரமணியிடம் அவரின் தோழி சாந்தி குறித்து, சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தீர்களா, இந்த வழக்கில் கைது செய்யாமலிருக்க பணம் கொடுத்தீர்களா உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. வீரமணி, வழக்கறிஞர் என்பதால் நாங்கள் கேட்ட கேள்விகளுக்குச் சாமர்த்தியமாகவே பதிலளித்தார்.
அவர் அளித்த தகவல்களைப் பதிவு செய்திருக்கிறோம். குறிப்பாக சாந்தி குறித்து கேள்வி கேட்டபோது அவரின் முகம் மாறியது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் வீரமணியைக் கைது செய்யாமலிருக்க பணம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர், நான் தவறே செய்யவில்லை. அப்படியிருக்கும் போது எப்படி பணம் கொடுப்பேன் என்று பதிலளித்தார்.
இதையடுத்து வீரமணி அளித்த பதில்களை ரிப்போர்ட்டாக நீதிமன்றத்தில் சமர்பிக்கும் வேலை நடந்து வருகிறது. இந்த வழக்கில் எங்களுக்குக் கிடைத்த ஆதாரங்கள், தகவல்களின்படி வீரமணியைக் கைது செய்யாமலிருக்க பணம் பேரம் பேசப்பட்டிருக்கிறது. அதுதொடர்பாக விசாரிக்க ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு டீம் அமைக்கப்பட்டிருக்கிறது”‘ என்றனர்.