ஜெயிலர் 2 வெற்றி… அண்ணாமலை ரீ-ரிலீஸ்… ரஜினி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! – Kumudam

Spread the love

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தப் படத்தின் வெற்றி ரஜினிகாந்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினிகாந்த்தின் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய ‘ஜெயிலர் 2’, திரையரங்கக் காட்சிகளிலேயே சுமார் 820 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1,000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நிறைவேறவில்லை.வட மாநிலங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகியிருந்தால், ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

என்றாலும், தமிழ்த் திரைப்படத் துறையில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையையும் இப்படம் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்த திரைப்படங்களில் இதுவே மிகப்பெரிய வணிகத்தைச் செய்த படமாகவும் மாறியுள்ளது.

இயக்குநர் நெல்சனுக்கும் தொடர் வெற்றியாக அமைந்துள்ளதால், ‘ஜெயிலர் 2’ அனைத்து வகையிலும் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியான படைப்பாக மாறியுள்ளது.முந்தைய பாகத்தின் இறுதியில் தனது மகனின் இறப்புக்குப் பிறகு, ஒரு மலைக் கிராமத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக அமைதியாக வாழும் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். அங்கு இருக்கும் நகராட்சி அதிகாரியுடன் ஏற்படும் ஒரு சின்ன மோதல், அவரைப் பழக்கடை நடத்தும் மூர்த்தி என்பவரிடம் கொண்டு சேர்க்கிறது.

இன்னொரு பக்கம், முதல் பாகத்தில் கொல்லப்பட்ட வர்மனின் மரணத்துக்குப் பழிவாங்க அவரது கூட்டாளி திலீப்பும் (சுராஜ்), அவர்களுக்கு மேலிருக்கும் மாஃபியா கும்பல் தலைவர் போதி கல்பக்கும் (எஸ்.ஜே. சூர்யா) வெறியோடு அலைகின்றனர். வர்மனைக் கொன்றது யார் என்று தேடி வரும் இந்தக் கும்பலின் பார்வை, இறுதியில் முத்துவேல் பாண்டியன் மீது விழுகிறது.

தான் ஒதுங்கி வாழ நினைத்த வன்முறை உலகத்துக்குள் மீண்டும் இழுக்கப்படும் முத்துவேல் பாண்டியன், இந்தச் சிலைக் கடத்தல் கும்பலை ஒட்டுமொத்தமாக எப்படி முடித்துக்கட்டுகிறார் என்பதே மீதிக்கதை.‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், நமோ நாராயணன், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் தங்களது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளனர்.இவர்களுடன் மோகன்லால், சிவ ராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்டோர் கௌரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் அமேசான் ஓடிடியில் கடந்த 12-ஆம் தேதி வெளியான நிலையிலும், தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றுடன் புக்கிங் நிறைவடைவதாகக் கூறப்படுகிறது.இந்த மகிழ்ச்சியில் திளைத்துள்ள ரஜினி ரசிகர்களுக்கு இன்னொரு ட்ரீட்டும் காத்துக்கொண்டிருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளில், அவர் நடித்த மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றான ‘அண்ணாமலை’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அண்ணாமலை’.இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், இசையமைப்பாளர் தேவா இசையமைப்பில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பால் வியாபாரியான ரஜினி, தன் நண்பனின் துரோகத்தால் வாழ்வில் மீண்டும் பெரிய இடத்தை நோக்கிச் செல்லும் கதையாக இது உருவாகியிருந்தது. நடிகர்கள் குஷ்பூ, சரத் பாபு, மனோரமா, ஜனகராஜ், ராதாரவி எனப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துக் கலக்கியிருந்தார்கள்.

இந்த நிலையில், ‘அண்ணாமலை’ திரைப்படம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு 2026 டிசம்பர் 12-ஆம் தேதியும், சில இடங்களில் டிசம்பர் 11-ஆம் தேதி முதலும் 4K தரத்திலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஒலித் தொழில்நுட்பத்திலும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சில சர்வதேச சிறப்புக் காட்சிகள் டிசம்பர் 11-ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *