Tamilnadu
oi-Vishnupriya R
மன்னார்குடி: எப்போது வேண்டுமானாலும் தவெகவில் இணைவேன். நான் ஒரு எம்எல்ஏ, எந்த நெருக்கடியும் என்னை கட்டுப்படுத்த முடியாது என மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் ஆளும் கட்சியுடன் இணக்கமாக இருந்ததால்தான் நிறைய திட்டங்கள் தொகுதி மக்களுக்கு கிடைத்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் எஸ்.காமராஜ் எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: மன்னார்குடி சுற்றுவட்ட சாலைக்கு இந்த ஆண்டு கிட்டத்தட்ட ரூ 46 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

மன்னார்குடியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து முதல்வர் விஜய்யிடம் பேசியுள்ளேன். தற்போது வேலை இல்லாமல் அவதிப்பட்டு வரும் விவசாயத் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என ஆணித்தரமாக வலியுறுத்தினேன். இதை கனிவுடன் கேட்டுக் கொண்ட முதல்வர் விஜய், திருவாரூர் உள்பட டெல்டா மாவட்டங்களுக்கு ஒரு குழுவை அனுப்பி இங்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் படும் துயரங்களை போக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு
அது போல் திமுகவும் ஒரு குழுவை அனுப்பியிருப்பதை வரவேற்கிறோம். கடந்த மே மாதம் 12 ஆம் தேதி சபாநாயகர் தேர்தல் நடந்தது. அதில் பங்கு பெற்றேன். அன்று மதியமே அமமுகவில் இருந்து என்னை விலக்கிவிட்டார்கள். 13 ம் தேதி முதல்வர் விஜய்க்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தேன்.
மன்னார்குடிக்கு திட்டங்கள்
அவருக்கு அனைத்து சட்டசபை நடவடிக்கைகளிலும் ஆதரவாக இருந்தேன். அதனால்தான் மன்னார்குடி தொகுதிக்கு நிறைய திட்டங்களை கொண்டு வர முடிந்தது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதால்தான் நிறைய திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.
தவெகவில் இணைய எந்த தயக்கமும் இல்லை
தவெகவில் இணைவதற்கு எந்த தயக்கமும் இல்லை. சூழ்நிலை வரும் போது உங்களிடம் கூறிவிட்டுத்தான் இணைவேன். அதனால் எந்தவித நெருக்கடியும் எனக்கு கிடையாது. நான் ஒரு எம்எல்ஏ, எந்த நெருக்கடியும் என்னை கட்டுப்படுத்தாது. இவ்வாறு காமராஜ் தெரிவித்திருந்தார்.
அமமுகவுக்கு 11 தொகுதிகள்
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் மன்னார்குடி தொகுதியில் மட்டுமே அமமுக வென்றது. இந்த நிலையில் தவெகவுக்கு 108 இடங்கள் மட்டுமே கிடைத்து பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திடீரென அமமுக எம்எல்ஏ காமராஜை காணவில்லை என தினகரன் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் காரின் முன் சீட்டில் அமர்ந்து எதிலோ கையெழுத்திடும் வீடியோ வைரலானது. இதையடுத்து குதிரை பேரம் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. பின்னர் ஒரு முறை டிடிவி தினகரனுடன் இணைந்து காமராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
புதுச்சேரியில் தங்கியிருந்தேன்
அப்போது காமராஜ் பேசுகையில், நான் பாண்டிச்சேரியில் தங்கி இருந்தேன். எனது மொபைல் எண்ணுக்கு மாலை 6 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசி, என்ன செய்யலாம் என முடிவு செய்தோம். நான் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
வாட்ஸ் ஆப்
அந்தக் கடிதம் வாட்ஸ்அப்பில் வந்துள்ளது. நான் பயன்படுத்துவது வாட்ஸ்அப் வசதி இல்லாத பட்டன் போன். அதனால் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் இந்த விவரம் தெரிய வந்ததும் ஆளுநர் மாளிகைக்கு நேரில் வருகை தந்து விவரத்தை தெரிவித்தார்” என்று அமமுக எம்எல்ஏ காமராஜ் தெரிவித்தார்.
காமராஜ் நீக்கம்
இதையடுத்து சட்டசபையில் முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேசியதை அடுத்து காமராஜ் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதற்கான வேட்புமனுவின் படிவம் பி-யில் அவர் அமமுக என்றே குறிப்பிட்டிருக்கும். ஒரு வேளை தினகரன், காமராஜை தகுதிநீக்கம் செய்ய கோரினால் அவர் அமமுக எம்எல்ஏவாக செயல்படுவாரா, இல்லையா என்பதை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்தான் முடிவு செய்ய வேண்டும்.
