“ஜோக்கரான காங்கிரஸ்”.. இப்படியா ஏமாறுவாங்க! சுயேச்சை பெண் வேட்பாளருடன் பாஜக ஆடிய கேம்.. கதறல் | In Rajasthan, BJP steals a Congress candidate and wins the Brij Nagar Panchayat Samiti Pradhan post

Spread the love

India

oi-Nantha Kumar R

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியை ஜோக்கராக்கி உள்ளார் பெண் வார்டு உறுப்பினர். அந்த பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி இருந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தான் தலைவர் பதவியை கைப்பற்றும் என்று நினைத்த நிலையில் அது நடக்கவில்லை.

in-rajasthan-bjp-steals-a-congress-candidate-and-wins-the-brij-nagar-panchayat-samiti-pradhan-post

இதற்கு முக்கிய காரணம் சுயேச்சை பெண் வேட்பாளர் தான். அவர் காலையில் சேலை அணிந்து முகத்தை மூடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியுடன் வந்து வேட்புமனு செய்தார். பிறகு அடுத்த சில நிமிடங்களில் சல்வாருடன் முகத்தை மூடி பாஜகவினருடன் வந்து வேட்புமனு செய்தார். பிறகு அதே பெண் சுயேச்சையாகவும் வேட்புமனு தாக்கல் செய்தார். இப்படி 3 வேட்புமனுக்களை செய்த அந்த பெண்ணை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

கடைசியில் அந்த பெண் காங்கிரஸ் மற்றும் சுயேச்சையாக தாக்கல் செய்த மனுவை வாபஸ் வாங்கிய நிலையில் போட்டியின்றி பாஜக சார்பில் பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அதிர்ச்சி வைத்தியமாக அமைந்த இந்த சம்பவத்தில் என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
ராஜஸ்தானில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ராஜஸ்தானின் டீக் மாவட்டம் பிரிஜ் நகர் பஞ்சாயத்தில் மொத்தம் 29 வார்டுகள் உள்ளன. இதில் 16 வார்டுகளை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜகவை சேர்ந்தவர்கள் 4 வார்டுகளிலும், சுயேச்சைகள் 9 பேரும் வெற்றி பெற்றனர்.

இந்த பஞ்சாயத்தில் தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்றால் ஒரு கட்சிக்கு 15 உறுப்பினர்கள் இருந்தால் போதும். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 16 உறுப்பினர்கள் இருந்தனர். இதனால் எளிதாக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கு தான் பெரிய ட்விஸ்ட் நடந்துள்ளது. அதாவது தமிழகத்தை போல் அங்கு பஞ்சாயத்து தலைவர் நேரடி தேர்தல் (மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வது) கிடையாது. மறைமுக தேர்தல் (வார்டு உறுப்பினர்கள் வாக்களித்து பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்வார்கள்) தான்.

இதையடுத்து பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியில் அந்த கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற 16 வார்டு உறுப்பினர்களில் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 14வது வார்டில் சுயேச்சையாக வெற்றி பெற்ற பதி குமாரி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ வாஜிப் அலி தான்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ வாஜிப் அலியின் முன்னிலையில் பதி குமாரி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது முகத்தை புடவை அணிந்து மூடியிருந்தார். அதேபோல் பாஜகவால் தலைவர் பதவியை கைப்பற்ற முடியாது. இருப்பினும் கூட பெயருக்கு காங்கிரஸ் கட்சி நிறுத்திய அதே சுயேச்சை வார்டு உறுப்பினர் பதி குமாரியை தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜவஹர் சிங் பெடமுடன் சல்வார் சூட் அணிந்து முகத்தை மறைத்து வந்து பதிகுமாரி வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஒரே நபராக காங்கிரஸ், பாஜக சார்பில் போட்டியிடுவதால் உண்மை தெரிந்தால் சிக்கலாகி விடும் என்று நினைத்த பதிகுமாரி சுயேச்சையாகவும் வேட்புமனு ஒன்றை தாக்கல் செய்தார். மொத்தமாக இந்த 3 வேட்புமனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைந்த நிலையில் பதிகுமாரி காங்கிரஸ் மற்றும் சுயேச்சையாக தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் வாங்கினார். இதனால் அவர் பாஜக சார்பில் தாக்கல் செய்த வேட்புமனு மட்டுமே இருந்தது. இதனால் போட்டியின்றி அவர் பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஷாக்கை கொடுத்தது. பஞ்சாயத்தில் பெரும்பான்மை இருந்தும் சுயேச்சை வேட்பாளரை தலைவர் பதவிக்கு நிறுத்தியது தான் இந்த தோல்விக்கு காரணமாக மாறியது. இதனால் தனது தவறுக்கு பொறுப்பேற்று முன்னாள் எம்எல்ஏ வாஜிப் அலி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து வெளியேறினார்.

இதுபற்றி வாஜிப் அலி, ”பாஜக தனது அதிகாரத்தையும், பணத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளது. நாங்கள் நிறுத்திய அதேவேட்பாளரை வேட்பாளராக்கி இந்த பஞ்சாயத்தை கைப்பற்றி உள்ளது. பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளது. இந்த பஞ்சாயத்தில் பொதுமக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தான் வாக்களித்து இருந்தனர். ஆனால் வேட்பாளரின் உடையை மாற்றி எங்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர்.” என்று குற்ம்சாட்டினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மாவட்ட தலைவர் சதீஷ் பன்சால் முற்றிலுமாக மறுத்தார். ”பதி குமாரி பாஜக வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வாஜிப் அலி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *