இந்தியாவின் முன்னாள் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை கேபினட் அமைச்சரும், முன்னாள் இந்திய ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரியுமான ஆர். கே. சிங் தன் எக்ஸ் பக்கத்தில் SIR குறித்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் வாக்காளர் பெயர் நீக்கம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து எழுதியிருக்கிறார்.
முதலில், யார் இந்த ஆர்.கே.சிங்?
ராஜ் குமார் சிங் (ஆர்.கே.சிங்) 1975-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த முன்னாள் இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரியான இவர், 2005-ம் ஆண்டில் நிதிஷ் குமார் பிகார் முதலமைச்சரானபோது, முதன்மைச் செயலாளராகப் பணியாற்றினார். 2011 முதல் 2013 வரை இந்திய அரசின் மத்திய உள்துறைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 2014-ம் ஆண்டு பிகாரின் ஆரா தொகுதியிலிருந்து பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
2025-ம் ஆண்டு பிகார் சட்டமன்றத் தேர்தலின் போது, குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு பாஜக வாய்ப்பு அளிப்பதாகவும், சீட் ஒதுக்குவதில் பிகார் பாஜக தலைவர்கள் பணம் பெறுவதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மறுநாளே, கட்சிக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்ததாகவும், உட்கட்சி ஒழுங்கை மீறியதாகவும் கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் மற்றும் எம்.எல்.சி அசோக் அகர்வால் ஆகியோரை பாஜக இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
முழுமையான கடிதம் இதோ!
என் சக நாட்டுமக்களுக்கு ஓர் திறந்த மடல்
இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியென்றால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் அவருடைய அதிகாரத்தில் உள்ளவர்களும் இந்த SIR என்ற பெயரில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் சட்டத்தை வெளிப்படையாக மீறிச் செயல்பட்டு வருகிறார்கள்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 21-ன் படி, ஏதேனும் ஒரு குறிப்பிட்டத் தொகுதியில் அல்லது பகுதியில் மட்டும், தகுந்த காரணங்களைப் பதிவு செய்துதான் “சிறப்புத் திருத்தம்’ (Special Intensive Revision) செய்ய முடியும். ஆனால், விதிவிலக்காக அரிதாகப் பயன்படுத்த வேண்டிய இந்த விதியை வைத்துக்கொண்டு, நாடு முழுமைக்கும் தீவிரத் திருத்தம் செய்ய உத்தரவிட்டது சட்டத்திற்குப் புறம்பானது. இதைச் சரி என்று சொன்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் தவறானது.
மேலும், நாடு முழுவதும் இந்த நடவடிக்கையைச் செயல்படுத்த எடுத்த முடிவு தேர்தல் ஆணையம் முழுமையாகச் சேர்ந்து எடுத்ததா அல்லது ஞானேஷ் குமார் மட்டுமே தனிச்சையாக எடுத்த முடிவா என்ற கேள்வியும் எழுகிறது.