ஞாயம் பாடி சொத்து; வெள்ளிப் பணம் மூட்டையில்… | அணை ஓசை 17

Spread the love

காவிரி கரையோர ஞாயம் பாடி கிராம ஆற்று மணலில் சிறுவர்கள் மற்றும் வாலிப வயதினர் மாலை வேலைகளில் “வெல்லம் திருடி பட்டை” மற்றும் “உப்பு பட்டை” போன்ற பெயர் கொண்ட விளையாட்டுகளை விளையாடுவார்கள் என்று இதுகுறித்து விளக்கமாகவும், ஆர்வமாகவும் எடுத்துரைத்தார். “அதுமட்டுமன்றி ஆற்றங்கரை ஓரம் மணலில் அமர்ந்தபடி மகுடி மற்றும் நீளமான புல்லாங்குழல் வைத்து இசைப்பது சிலரின் அன்றாட வாடிக்கை.

பெரும்பாலும் ஆடு மாடு மேய்த்து பட்டியை பாதுகாக்கும் கிராமவாசிகள்தான் இப்படி இசைப்பார்கள். அவ்வளவு இனிமையாக, ரம்மியமாக இருக்கும். இவர்கள் முறையான இசை பயின்றவர்கள் இல்லை எனினும் கிராம மக்கள் அனைவரும் அவர்களது இசையில் மயங்கினார்கள் என்பது தான் உண்மை. அந்தக் குடும்பங்கள் இங்கு மார்ட்டள்ளிக்கு வந்த பிறகும் மாலை வேளைகளில் சங்கீதம் பல காலம் தொடர்ந்தது. இப்போது சில வருடங்களாக அத்தகைய பழைய நபர்கள் இல்லாததால் அது மறைந்து போன, மறந்து போன கலையாக ஆகிவிட்டது” என்றார் பேராசிரியர்.

மார்ட்டள்ளி கிராமம்

மார்ட்டள்ளி கிராமம்

“அந்த காலத்திலேயே மக்கள் சாராயத்துக்கு அடிமையாக இருந்தார்கள். நிறைய பேர் தினமும் சாராயம் குடிப்பார்கள். சிலர் சாராயம் காய்ச்சியதும் கூட உண்டு! மக்கள் அவ்வளவாக கல்வி அறிவு பெற்றவர்களாக அப்போது இல்லை.

மேட்டூர் அணை கட்டும்போது டிராம் ரயில் வண்டியில் இணைத்திருக்கும் சிறிய சைஸ் இரும்பு வேகனை சிலர் தலையில் தூக்கிக் கொண்டு திருடிக் கொண்டு வந்த கதையெல்லாம் எனது பாட்டனார் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பின்னர் அவை பெரிய பஞ்சாயத்துக்களுக்கு வழி வகுத்த கதையெல்லாம் உண்டு”.

“ஞாயம்பாடி மக்கள் இங்கே மார்ட்டள்ளிக்கு புலம் பெயர்ந்த பிறகு சொந்த ஊர் கொளத்தூர் வார சந்தைக்கு வியாழன் காலை மார்ட்டள்ளியில் இருந்து கிளம்புவோம். பாலாறு கரையோரமாக காட்டினூடே வண்டித்தடத்தில் நடந்தே போய் இரவு சேர்ந்து விடுவோம். வெள்ளிக்கிழமை கொளத்தூர் சந்தை. வழியில் யானைகளை இடையில் பார்ப்பது வெகு சகஜம். அதுபாட்டுக்கு போய்விடும். நான் சிறுவனாக இருந்தபோது பலமுறை இப்படி நடந்தே போயிருக்கிறேன். வெள்ளி இரவு திரும்பி சனிக்கிழமை விடியற்காலை மார்ட்டள்ளி வந்து சேர்வோம் ” என்று தன் பழைய நினைவுகளை பகிர்ந்தபடியே இருந்தார்.

“பஞ்சம் அல்லது வறுமை காலங்களில் அலங்காட்டில் ( Forest) கிடைக்கும் “இருளைக் கிழங்கு” மட்டுமே முக்கிய உணவாகும். முல்லைக் கொடியில் காய் கொத்துக்கொத்தாக இருக்கும். பறித்து வேகவைத்து வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவை” என்று கூறி “நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா என்று நம்மை கேட்டார்”.

‘ஙே’ என்று விழித்து அந்த கொடுப்பினை நமக்கு இல்லையே சார் என்று சிரித்தேன்.

அணை கட்டியதால், உங்கள் குடும்பம் புலம்பெயர்ந்து வந்ததினால் நீங்கள் வாழ்க்கை இழந்து போனதாக கருதுகிறீர்களா?” என்று கேட்டேன்.

“நோ! தற்போது படிப்பு, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் போன்ற பல விஷயங்களில் நாங்கள் மிகவும் முன்னேறி இருப்பதாகவே நினைக்கிறோம். இங்கு வந்த பலர் கல்வி கற்க கிறிஸ்தவ மிஷனரிகள் உதவினர். ஆரம்பக் கல்வி, சுகாதாரம் பேண நர்சுகள் கிராமம் தோறும் இருந்தனர். அவர்கள் சிறார்களுக்கு ஒழுக்கத்தை போதித்து கல்வியையும் புகட்டினர் என்று பெருமை ததும்ப கூறியதை காண முடிந்தது. இவருடைய மகன் ஒரு மருத்துவராக இருக்கிறார்.

“சோம்பல் இருக்கக் கூடாது. நேர்மை மற்றும் கடும் உழைப்பு இருந்தால் எந்தத் துறையிலும் வெற்றி பெறலாம். அதுதான் நான் என் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அட்வைஸ்” என்று இன்னும் பல விஷயங்களை பகிர்ந்தார் மணி எனும் மரிய சூசை அந்தோணி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *