தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.
118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.
இந்நிலையில் தான் திமுகவில் இருந்து விலகி 5 இடங்களை வென்ற காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கிறது.
இன்னும் ஆறு இடங்கள் தேவை என்பதால் தவெக சிக்கலில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி வருகின்றன.
இதனிடையே தவெக தலைவர் விஜய் நேற்று ( மே. 6) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.
பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையோடு வாருங்கள் என ஆளுநர் அனுப்பி வைத்த நிலையில் தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா ரத்தானது.
இன்று மீண்டும் ஆளுநரை விஜய் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ஆளுநரின் இந்த செயல் அருவருப்பானது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்…
ஆனால் விஜய் மக்கள் ஆணையைப் பெற்றுள்ளார். சட்டமன்றத்தில் தனது உரிமையை நிலைநாட்ட அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.