குணமடைய ஏன் அதிக காலம் ஆகிறது?
தொற்று ஏற்படுவது மட்டுமல்லாமல், அதிலிருந்து குணமடைவதும் நீரிழிவு நோயாளிகளுக்குச் சவாலாக இருக்கலாம்.
ரத்தச் சர்க்கரை அதிகமாக இருக்கும்போது நோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாடு பாதிக்கப்படலாம். அதே நேரத்தில், ரத்த ஓட்டம் குறைவதால் காயங்கள் ஆறுவதற்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சரியான அளவில் கிடைக்காமல் போகலாம். இதனால் காயங்கள் ஆறுவது தாமதமாகி, தொற்றைக் கட்டுப்படுத்துவதும் கடினமாகலாம்.
இதில் மற்றொரு முக்கியமான விஷயமும் உள்ளது. தொற்று ஏற்பட்டால் உடலில் சுரக்கும் மன அழுத்த ஹார்மோன்கள் (Stress Hormones) ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். இதனால் நோயின்போது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது சிரமமாகலாம்.
அதேபோல், ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதது தொற்றிலிருந்து குணமடைவதையும் பாதிக்கலாம். இதனால் ஒரு சுழற்சி உருவாகிறது. தொற்றானது ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது; அதிக ரத்தச் சர்க்கரை உடல் குணமடைவதை மேலும் கடினமாக்குகிறது.

தொற்று அபாயத்தைக் குறைக்க நீரிழிவு நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?
தொற்றுகளைத் தடுப்பதற்கு நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், அன்றாட உடல்நலப் பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சையைத் தொடர்ந்து பின்பற்றுவதுடன், அறிவுறுத்தலின்படி ரத்தச் சர்க்கரை அளவையும் பரிசோதிக்க வேண்டும்.
பாதங்களில் காயம், கொப்புளம், சிவத்தல், வீக்கம் அல்லது ஆறாத புண்கள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
கைகளை முறையாகக் கழுவுதல், சருமம் மற்றும் பாதங்களைச் சுத்தமாகப் பராமரித்தல் ஆகியவை தொற்று அபாயத்தைக் குறைக்க உதவும்.