சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் சோதனை இன்று(செப்.,16) திருச்சியில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீட்டில் காலை தொடங்கிய சோதனை, பல மணி நேரம் நடைபெற்ற நிலையில், சோதனை முடிந்த பிறகு அவர் கூறிய தகவல்கள் வழக்கின் அடுத்த கட்டம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பெருமளவு பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரது கூட்டாளியாகக் கூறப்படும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (செப்டம்பர் 16) திருச்சியில் உள்ள முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் வீடு உள்ளிட்ட அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 4 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
காலை 7.40 மணி முதல்… 3.40 மணி வரை!
இதனைத் தொடர்ந்து, சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், காலை 7.40 மணிக்கு சென்னை சிசிபி போலீசார் வீட்டுக்கு வந்ததாகவும், 20-க்கும் மேற்பட்ட போலீசார் பிற்பகல் 3.40 மணி வரை சோதனை நடத்தியதாகவும் தெரிவித்தார். வீட்டில் இருந்த அனைத்து அறைகளையும் திறந்து கொடுத்ததாகவும், டிராயர்கள் உட்பட வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், போலீசார் எடுத்துச் சென்ற பொருட்கள் குறித்து அவர் கூறிய தகவல்தான் தற்போது கவனம் பெற்றுள்ளது.
“அந்த காலத்து கோப்புகளையும் எடுத்துட்டாங்க!”
தான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் பாதுகாத்து வைத்திருந்த பல்வேறு ஆவணங்கள் வீட்டில் இருந்ததாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மாவட்ட வாரியாக மேற்கொண்ட ஆய்வுகள், பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்ட புதிய திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பான கோப்புகள் இருந்ததாகவும், அந்தக் கல்வித்துறை ஆவணங்களை போலீசார் எடுத்துச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், போலீசாரின் சோதனை வெறும் ஆவணத் தேடலா? அல்லது வழக்கின் முக்கியமான தொடர்புகளை கண்டறிவதற்கான விசாரணையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
“டார்கெட் நீங்க இல்ல… அவர் தான்!”
இதையெல்லாம் விட அன்பில் மகேஷ் கூறிய ஒரு தகவல்தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தியபோது, தன்னிடம், “டார்கெட் நீங்க இல்லைங்க.. டார்கெட் ‘அவர்’தான்.. அவர் பேரை சொல்லுங்களேன்.. விட்டுவிடுகிறோம்” என்று கூறியதாக அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், விசாரணை என்பது உண்மையை கண்டறிவதற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், யாரையும் பெயர் சொல்ல வைப்பதற்காகவோ, விசாரணை உத்திகள் என்ற பெயரில் அழுத்தம் கொடுப்பதற்காகவோ இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “யார் தவறு செய்திருந்தாலும் அதற்கான தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்” என்றும் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
அந்த ‘அவர்’… முத்துக்குமாரா?
அப்படியென்றால் அன்பில் மகேஷ் குறிப்பிட்ட அந்த “அவர்” யார்? இந்தக் கேள்விக்கான விடையாக தற்போது அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் முத்துக்குமார்.
இந்த வழக்கில் A2-வாகக் குறிப்பிடப்பட்டுள்ள முத்துக்குமார், பி.டி.அரசகுமார் நடத்தி வந்த சங்கத்தின் பொருளாளராக இருந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் முக்கியமாகத் தேடப்படும் நபராகவும் அவர் உள்ளார்.
முத்துக்குமார் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதுடன், அன்பில் மகேஷுக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. இருவரும் பள்ளி நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இதனால், அரசகுமார் – முத்துக்குமார் – அன்பில் மகேஷ் ஆகியோருக்கு இடையேயான தொடர்புகள் குறித்து விசாரணை தீவிரமடைந்திருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முத்துக்குமார் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் சூழலில், போலீசாரின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதும் கவனம் பெற்றுள்ளது.
தனியார் பள்ளிகள் விவகாரம்… இன்னொரு ‘லிங்க்’?
இதற்கிடையே, அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தனியார் பள்ளிகள் தொடர்பாக வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு அரசாணை குறித்தும் விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது பள்ளிக்கல்வித் துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் ஐஏஎஸ் தொடர்பான தகவல்களும் விசாரணையில் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு அரசாணை வெளியிடப்பட்டு, பின்னர் குறுகிய காலத்திலேயே ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக புகார்கள் எழுந்திருந்ததாகவும், இதன் பின்னணியில் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக புகார்கள் கூறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த முழுமையான விவரங்கள் விசாரணையில் பெறப்பட்டுள்ளதா என்பதும் தற்போது முக்கியக் கேள்வியாக உள்ளது.
அடுத்தது என்ன?
ஒருபுறம் பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். மறுபுறம் A2-வாகக் கூறப்படும் முத்துக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். தனியார் பள்ளிகள் தொடர்பான அரசாணை விவகாரமும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில் அன்பில் மகேஷின் வீட்டில் நடைபெற்ற நீண்ட நேர சோதனையும், அவர் கூறிய “டார்கெட் நீங்க இல்ல… அவர் தான்” என்ற குற்றச்சாட்டும் வழக்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்பில் மகேஷ் குறிப்பிட்ட அந்த ‘அவர்’ முத்துக்குமார்தானா? அல்லது போலீஸ் விசாரணையின் இலக்கில் வேறு ஒருவர் இருக்கிறாரா? இதற்கான அதிகாரப்பூர்வ பதில் போலீஸ் விசாரணையின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில்தான் தெரியவரும்.

