இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சில டாஸ்மாக் கிடங்குகளின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள, TNMSC-இன் பொறியியல் பிரிவின் உதவியை டாஸ்மாக் நிர்வாகம் கோரியது. அரசின் ஒரு துறை, தனது உட்கட்டமைப்புப் பணிகளுக்காகச் சிறப்பான பொறியியல் கட்டமைப்பு கொண்ட மற்றொரு துறையின் (TNMSC – Civil Wing) உதவியை நாடுவது வழக்கமான நிர்வாக நடைமுறைதான்.
இதற்காகப் புற ஆதார முறையில் (Outsourcing) 5 கட்டடவியல் மற்றும் 2 மின்சார உதவிப் பொறியாளர்கள் என மொத்தம் 7 கூடுதல் பொறியாளர்களைப் பணியமர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான ஊதியம் மற்றும் இதர செலவுகள் முழுவதையும் டாஸ்மாக் (TASMAC) நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது. இதற்காக மருத்துவத்துறையின் நிதியோ, TNMSC-இன் நிதியோ ஒரு ரூபாய் கூடப் பயன்படுத்தப்படவில்லை.
தற்போது டாஸ்மாக் செலவில் பணியமர்த்தப்படும் இந்தக் கூடுதல் பொறியாளர்கள் மூலம், TNMSC-இன் பொறியியல் பிரிவு மேலும் வலுப்படுத்தப்படும். மருத்துவப் பணிகள் கழகத்திற்கு எவ்வித கூடுதல் நிதிச்சுமையும் இல்லாமல், நமது சொந்த மருந்துக் கிடங்குகளின் பராமரிப்புப் பணிகளும் திறம்படவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படும். இதனால், அரசு மருத்துவமனைகளுக்கான தரமான மருந்து விநியோகக் கட்டமைப்பு மேலும் வலுவடையும்.
உண்மை நிலை அறியாமல், வெறும் அரசியல் லாபத்திற்காகப் பரப்பப்படும் அவதூறுகளையும், வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்படும் விமர்சனங்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் தொடர்ச்சியான மக்கள் நலப்பணிகளே சிறந்த பதிலாக அமையும் என மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க.அருண்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.