கோடைக்காலம் தொடங்கிவிட்டது… பழைய சோறு, நீராகாரம் பற்றிய அறிவுரைகள் இந்த வருடமும் தவறாமல் நம்மிடம் வரும். நட்சத்திர ஹோட்டல்களில் இவையெல்லாம் இடம்பெறும். இந்நிலையில், ‘மறு உலைக் கஞ்சி’ என்ற பெயரில் ஓர் உணவு குறித்த வீடியோ கடந்த சில நாள்களாக வைரலாகி வருகிறது. வடித்த சோற்றில் நீர் ஊற்றிவைத்து, அதை உணவாக அல்லாமல், மருந்தாகப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அதுதான் மறு உலைக் கஞ்சியாம். அதை ஆறு மாதங்கள்வரை கூட வைத்திருந்து பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

விக்ரம்குமார்
இப்படியோர் உணவு உண்மையிலேயே வழக்கத்தில் இருந்ததா, மறு உலைக் கஞ்சி என்பது மருந்தாகும் உணவா… திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் பேசினோம்.
இருமுறைக் கஞ்சியே மறு உலைக் கஞ்சி!
”கஞ்சி ரகங்களைப் பொறுத்தவரை சித்த மருத்துவத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும், மாவட்டத்திலும் வெவ்வேறு ரகங்களில் கஞ்சி ரகங்களைத் தயாரித்து வந்திருக்கிறார்கள். இது குறித்த பல குறிப்புகள் உணவு சார்ந்த நூல்களிலும், சித்த மருத்துவ நூல்களிலும் இருக்கின்றன. கஞ்சிக்கான மகத்துவம் மற்றும் அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஏராளமான பதிவுகள் உள்ளன.
‘மறு உலைக் கஞ்சி’ என்பது சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்ட ‘இருமுறைக் கஞ்சி’யைக் குறிப்பது. அதாவது இருமுறை வடித்த கஞ்சியின் மறு உருவமாகச் சொல்லலாம். இந்தக் கஞ்சிக்கு சித்த மருத்துவத்தில் ‘புனர்பாகம்’ என்றும் ஒரு பெயர் உண்டு.

இருமுறை வடித்த கஞ்சி என்பது சாதாரணமாகக் கஞ்சி தயாரிப்பது போன்றதுதான். அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து 20 முதல் 30 நிமிடங்கள் சிறு தீயில் வைக்க வேண்டும். கஞ்சி பதத்திற்கு வந்த பிறகு, அதனை எடுத்துவிட்டு மீண்டும் இன்னொரு முறை அதேபோலச் செய்ய வேண்டும். இப்படி இரண்டாவது முறை செய்வதால்தான் இது இருமுறைக் கஞ்சி எனப்படுகிறது. இரண்டாவது முறை செய்த கஞ்சியில் கொஞ்சம் சர்க்கரையும், கால் முதல் அரை டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறும் சேர்க்கச் சொல்கிறார்கள். இந்தக் கஞ்சிக்கு பித்தத்தைக் குறைக்கக்கூடிய செயல்பாடு உண்டு. தவிர, அம்மை நோய்களுக்குக் கொடுக்கக்கூடிய உணவாகவும் அந்தக் காலத்தில் இந்த ‘புனர்பாகம்’ அல்லது இருமுறை வடித்த கஞ்சியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
குளிர்ச்சி தரக்கூடியது, குடலுக்கு நல்லது!
மறுஉலைக் கஞ்சி உடலுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. சில மணி நேரம் முதல் சில நாள்கள் வரை இதை வைத்திருந்து பயன்படுத்துவதால் இதில் ‘ஃபெர்மென்டேஷன்’ (Fermentation) எனப்படும் நொதித்தல் நடக்கும். இந்த நொதித்தல் மூலம், உடலுக்கு நன்மை செய்யக்கூடிய ‘புரோபயாடிக்’ (Probiotic) பாக்டீரியாக்கள் அல்லது கிருமிகள் அதிகரிக்கும். அதுவே பல்வேறு நோய்களைக் குறைப்பதற்கான செயல்களைச் செய்யும்.

நொதிக்க வைக்கப்பட்ட பானங்களை, உணவுகளை எடுத்துப் பழகியவர்கள் நாம் என்பதால், இந்தக் கஞ்சியும் அப்படி ஓர் உணவாகப் பார்க்கப்படுகிறது. கஞ்சி என்றாலே அதில் நிறைய ஊட்டச்சத்துகள் இருக்கும். குறிப்பாக, பாரம்பர்ய அரிசிகளில், வண்ண வண்ண அரிசிகளில் (Coloured rice) இந்தக் கஞ்சியைத் தயாரிக்கும்போது, அதிலுள்ள எல்லா ஊட்டச்சத்துகளும் முழுமையாக நமக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது என்பதால், இது வயிறு தொடர்பான பிரச்னைகளை குணமாக்கும். அல்சர் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும்.
அல்சர் நோயாளிகள் கவனம்!
வயிற்றுப் புண்ணைக் குறைப்பதற்காக இருமுறை வடித்த கஞ்சியை எடுக்கிறோம் என்றால், அதில் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டாம் என சித்த மருத்துவம் அறிவுறுத்துகிறது. காய்ச்சல் வந்து போன பிறகு உடலைத் தேற்றுவதற்கும், ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பவர்களுக்கும் இந்தக் கஞ்சி மிகச் சிறந்தது. மறு உலைக் கஞ்சியை நாள்பட வைத்துப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். அப்படிச் செய்யும்போது சரியாக நொதித்துச் சுவையாக இருக்கும்போது பயன்படுத்தலாம். ஆனால், நாள்பட வைக்கும்போது சரியான முறையைப் பின்பற்றுகிறோமா, கஞ்சி கெட்டுப்போகாமல் உள்ளதா என்று பார்த்துப் பயன்படுத்த வேண்டியது மிக முக்கியம்.

அந்தக் காலத்தில் மறு உலைக் கஞ்சியை மாதக் கணக்கில் வைத்திருந்து பயன்படுத்தியதாகச் சொல்கிறார்கள். தற்போதைய வாழ்க்கை முறையில் அது சாத்தியமா என்று தெரியவில்லை. அப்படிச் செய்கிறவர்கள், கிராமத்தினரிடம் சரியான முறையைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். உணவு என்பதால் தவறு நிகழ்ந்துவிட்டால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால் கவனமாகச் செய்வது பாதுகாப்பானது” என்கிறார் மருத்துவர் விக்ரம்குமார்.