டிரெண்டிங் ஸ்டார்களுக்கான பெருமைமிகு அங்கீகாரம்!

Spread the love

நூற்றாண்டில் நடைபோடும் விகடனின் மகுடத்தில் மற்றுமொரு வைரமாய் ஜொலித்தது, 2026-ம் ஆண்டுக்கான விகடன் டிஜிட்டல் விருதுகள் வழங்கும் விழா. செப்டம்பர் 5-ம் தேதி எல்லோரின் இதயங்களையும் வசீகரித்த வைரல் ஸ்டார்கள், சென்னை கலைவாணர் அரங்கில் சங்கமித்தார்கள். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு மகுடம் சூட்டப்பட்ட அந்த மேடையின் க்யூட் தருணங்கள் இங்கே…

* இந்தக் கொண்டாட்ட நிகழ்வை சுவாரஸ்யமாக இளமையும், புதுமையாகத் தொகுத்து வழங்கியது, சுதர்சன் காந்தி-கிகி காம்போ.

* தமிழ் ரசிகர்களின் இதயத்தை வசீகரித்திருக்கும் இளம் நாயகி கயாடு லோஹருக்கு ‘Most Celebrated Star in Digital’ விருதை இயக்குநர் வெங்கட் பிரபு வழங்கினார்.

‘`எல்லோரின் டிரீம் கேர்ளாக கயாடுதான் இருக்கிறார். வளர்ந்துவரும் நடிகையாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்’’ என வெங்கட் பிரபு பாராட்ட, நெகிழ்ந்து நன்றி சொன்னார், கயாடு. “ரசிகர்கள் எனக்குக் கொடுத்த அன்பின் பரிசுதான் இந்த விருது. உங்களால்தான் நான் கொண்டாடப்படுகிறேன். இந்த நாளை மறக்க முடியாததாக மாற்றிவிட்டீர்கள்’’ என கயாடு சொல்ல, ரசிகர்கள் கைதட்டிக் கொண்டாடினார்கள்.

“ ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவி நடித்ததைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்” என்ற தன் ஆசையையும் பகிர்ந்துகொண்ட கயாடுவுக்கு சிறப்புப் பரிசாக ரூ.1,80,000 மதிப்பிலான சாம்சங் கேலக்ஸி Z fold 8 போனை சத்யா ஏஜென்சீஸ் சார்பில் ஜாக்சன் வழங்கினார்.

* கிராமத்துச் சமையலை உலக அளவில் கொண்டு சென்று தனி அடையாளம் பெற்றிருக்கும் Village Cooking Channel குழுவுக்கு ‘Digital Icon’ விருதை அமைச்சர் ராஜ்மோகன் வழங்க, அபாக்சிஸ் ஹாஸ்பிட்டல்ஸ் சேர்மன் டாக்டர் ஆச்சா ஆறுமுகசாமி உடன் இணைந்தார்.

`தலைவாசல்’ விஜய், செஃப் தீனா, என்.நவீன்குமார், ஏ.சரவணகுமார் (அரோமா டெய்ரி)
`தமிழ் டிரக்கர்’ புவனிதரண், ஆர்.கே.செல்வமணி
ஏ.ஆர்.முருகதாஸ், `காத்தாடி கிளப்’ குழுவினர், ஆர்.சந்திரசேகரன் (ரூபிஅபெக்ஸ்)

“ஒரு வீடியோவை அப்லோடு செய்துவிட்டு, `500, 600 வியூஸ் ஆகிறதா, அது 1,000 ஆகிறதா…’ எனக் காத்திருந்து பார்ப்போம். இன்று எங்கள் சேனல் 1,000 கோடி பார்வைகளைக் கடந்திருக்கிறது. ஒரு ஷூட்டிங்கை முடிக்க முழு நாள் ஆகும். காலை 6 மணிக்கு கேமராவைக் கையிலெடுத்தால் மாலை 6 மணி வரை அதைக் கையிலேயே வைத்திருக்க வேண்டும். எங்கள் கேமராமேன்தான் எங்களுக்கு எல்லாமே’’ என Village Cooking Channel குழுவினர் நெகிழ்ந்தனர்.

அவர்களின் ஆரம்பகாலப் போராட்டத்தை நினைவுகூர்ந்த அமைச்சர் ராஜ்மோகன், “கிராமத்தில் நெட்வொர்க் கிடைக்காது. போனை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து கூரைமேல் தொங்கவிடுவார்கள். ஒரு வீடியோ அப்லோடு ஆக நான்கு மணி நேரம் ஆகும். அப்படியொரு நிலையிலிருந்துதான் Village Cooking Channel உருவாகியிருக்கிறது” என்றார்.

* ‘Made in Korea’ திரைப்படத்தின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த நடிகை பிரியங்கா மோகனுக்கு ‘Sensational Performer of the Year’ விருதை இயக்குநர் ஹெச்.வினோத் வழங்க, தங்கமயில் ஜூவல்லரியின் சீனியர் மேனேஜர் அருண், ஏரியா மேனேஜர் கிஷோர்குமார் உடன் இணைந்தனர்.

“இந்தியாவிலிருந்து ஒரு பெண் கொரியாவுக்குச் சென்று தனது கனவை நிறைவேற்றும் கதைதான் ‘Made in Korea’ படத்தில் நடிக்க என்னைத் தூண்டியது. கொரியாவில் சுமார் ஒன்றரை மாதம் படப்பிடிப்பு நடைபெற்றது. கொரியாவில் எனக்கு ஓர் Extended Family கிடைத்திருக்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், தென்கொரிய அதிபர் கலந்துகொண்ட விருந்தில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.

மேலும் “வெற்றிமாறன் சார் இயக்கும் ‘அரசன்’ படத்தில் நடிப்பது மிகப்பெரிய வாய்ப்பு. வெற்றிமாறன் சார் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். சிம்பு சாருடன் முதன்முறையாக நடிக்கிறேன். படத்தில் வித்தியாசமான சிம்புவைப் பார்ப்பீர்கள். என்னுடைய கதாபாத்திரத்துக்காக முதன்முறையாக வடசென்னை வட்டார மொழியையும் கற்றுப் பேசியிருக்கிறேன். ‘அரசன்’ எனக்கு ஒரு மேஜிக்கலான அனுபவம்’’ என எதிர்பார்ப்பைக் கூட்டினார் பிரியங்கா.

* தனித்துவமான நகைச்சுவை, மீம்ஸுகள், இயல்பான செஸ் கன்டென்ட்டுகளால் இளைஞர்களிடம் பிரபலமான ‘Goofygen’ சுதர்சனுக்கு ‘Best Solo Creator-Male’ விருதை இயக்குநர் பாரி இளவழகன் வழங்கினார்.

வெங்கட் பிரபு, கயாடு லோஹர்
கயாடு லோஹர், ஜாக்சன் (சத்யா ஏஜென்சீஸ்)
ஹெச்.வினோத், `ரிசார்ட்’ குழுவினர், ஓம் பிரகாஷ், சதீஷ்குமார் (ஜென்விஸ்டாஸ் ரியால்ட்டி)

“ ‘Goofygen’் வீடியோக்களைத் தொடர்ந்து பார்க்கிறேன். அவரது நகைச்சுவை டைமிங், எடிட்டிங் பாணி சிறப்பாக இருக்கின்றன. ஒரு திரைப்படத்தைப்போலக் காட்சிகளை நகர்த்துவது, சரியான இடத்தில் இடைவெளிவிட்டுப் பின்னர் பேசுவது என அவருக்கென்று தனித்துவமான அணுகுமுறை இருக்கிறது. அதுதான் ரசிகர்களை அதிகம் கவர்கிறது” என்று பாரி பாராட்ட, “ ‘Oxygen என்பதைப்போல ‘Goofygen’ என ரேண்டமாகத்தான் பெயர் வைத்தேன். வேறு யாரும் அந்தப் பெயரைப் பயன்படுத்தவில்லை. அதனால் நானே வைத்துக் கொண்டேன்’ எனத் தனது வித்தியாசமான பெயரின் பின்னணியையும் பகிர்ந்தார் சுதர்சன்.

நடிகர் விமல் வீடியோவில் வந்து கூஃபிக்கு தன்னுடைய வாழ்த்துகளைக் கூறினார்.

* தமிழ்நாடு முழுவதும் பயணித்து உணவுகளையும், அவற்றின் பின்னணியில் இருக்கும் மனிதர்களையும் உணர்வுபூர்வமாகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய செஃப் தீனாவுக்கு (Chef Deena’s kitchen) ‘Best Solo Celebrity Channel-Male’ விருதை நடிகர் ‘தலைவாசல்’ விஜய் வழங்க, அரோமா டெய்ரி புராடக்ட்ஸின் நிர்வாகப் பிரதிநிதி என்.நவீன்குமார், பிராந்திய விற்பனை மேலாளர் ஏ.சரவணகுமார் உடன் இணைந்து நினைவுப்பரிசு வழங்கினர்.

“ ‘தலைவாசல்’ விஜய் என்ற என் பெயரே இப்போது ‘செஃப் நெடுமாறன்’ என மாறிவிட்டது. இது பொறுமைக்கும் கனவுக்கும் கிடைத்த வெற்றி. Silence, Patience, Perseverance ஆகிய மூன்றும் இருந்தால் வெற்றிபெற முடியும். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் முதல்வர் விஜய்தான்” என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார் ‘தலைவாசல்’ விஜய்.

விருதோடு நெகிழ்ந்த செஃப் தீனா, “ஒரு செலிபிரிட்டியின் கையிலிருந்து இப்போதுதான் முதன்முறையாக விருது வாங்குகிறேன். நான் இன்று இங்கே நிற்பதற்கு என்னுடைய மனைவியும் முக்கியமான காரணம். தமிழ்நாடு முழுவதும் நான் பயணம் செய்கிறேன். அதற்கெல்லாம் என் மனைவி அளித்துவரும் ஒத்துழைப்பு அளப்பரியது” எனத் தனது வெற்றியை மனைவிக்கு அர்ப்பணித்தார்.

ஹெச்.வினோத், பிரியங்கா மோகன், அருண், கிஷோர்குமார் (தங்கமயில் ஜூவல்லரி)
சௌமியா அன்புமணி, கோபிநாத், இந்துகுமாரி இனியன் (புராமினன்ஸ் விண்டோ சிஸ்டம்ஸ்)
சௌமியா அன்புமணி, விஜி சாரோன் பிலிப், ஓம் பிரகாஷ் (ஜென்விஸ்டாஸ் ரியால்ட்டி)

* டிஜிட்டல் தளத்தில் தனது வித்தியாசமான நடிப்பாலும் தனித்துவமான கதாபாத்திரங்களாலும் சப்ஸ்கிரைபர்களின் கவனத்தை ஈர்த்த பூஜாவுக்கு ‘Best Performer-Female’ விருதைத் திரைப்பட இயக்குநர் பாரி இளவழகன் வழங்க, ஹப்கிராஃப்ட் மேனேஜிங் பார்ட்னர்ஸ் ஸ்ரீகாந்த், மகேஷ் உடன் இணைந்தனர்.

மேடையில் பேசிய பாரி இளவழகன், “ `அன்பே டயானா’ திரைப்படத்துக்கு OTT-யில் கிடைத்துவரும் வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “ஒரு கமர்ஷியல் படம் மக்களைச் சிரிக்கவைப்பதற்காக மட்டும் இருக்கக் கூடாது. சமூகத்துக்குத் தேவையான சில விஷயங்களையும் பேச வேண்டும். முன்பு வெளியான பல கமர்ஷியல் படங்கள் இதைச் சிறப்பாகச் செய்தன. இடையில் அந்த அணுகுமுறை சற்றுக் குறைந்துவிட்டது” என்றார்.

விருதைப் பெற்றுக்கொண்ட பூஜா, “இந்த அளவுக்கு மதிப்பு மிக்க ஒரு மேடையில் விருது பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் உணர்ச்சிமயமான மனநிலையில் இருக்கிறேன். தொடக்கத்தில் பல நிராகரிப்புகளைச் சந்தித்தேன். `Finally’ சேனல்தான் எனக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தது. அங்கிருந்துதான் என்னுடைய வளர்ச்சிப் பயணம் தொடங்கியது” என்ற பூஜா, தன் நண்பர் நந்தா இல்லாமல் விருது பெறுவது முழுமையாகத் தோன்றவில்லை என்று வருந்தினார். அந்த தருணத்தில், நந்தா சர்ப்ரைஸாக மேடையேறி பூஜாவுக்கு அன்பளிப்பு வழங்கி வாழ்த்தினார்.

* பரபரப்பான திரைக்கதையாலும், அழுத்தமான கதாபாத்திரங்களாலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த ‘குற்றம் புரிந்தவன்’ வெப் தொடருக்கு ‘Best Web Series’ விருதை இயக்குநர் இரா.சரவணன், ‘மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்’ யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து வழங்கினர். இவர்களுடன் ரூபிஅபெக்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆர்.சந்திரசேகரன், மேனேஜிங் டைரக்டர் துரைசிங்கம் உடன் இணைந்து நினைவுப்பரிசு வழங்கினர்.

“விகடன் எம்.டி-யிடம் வெப் சீரீஸுக்கான கதை சொல்வது மிகவும் கடினம். `அண்ணாச்சி’ கதை முதல் நீரா ராடியா கதை வரை அவரிடம் சொல்லித் தோற்றிருக்கிறேன். அவரிடம் விருது வாங்குவது பெரிய விஷயம்… பாராட்டுகள்” என்றார் இயக்குநர் இரா.சரவணன்.

“இது மாதிரியான படங்களை அடையாளம் கண்டு விருது வழங்குவது மிகவும் முக்கியமானது. இந்தக் குழுவுக்கு விருதை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார் ‘மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்’ யுவராஜ் கணேசன்.

“குறும்படங்கள் இயக்கிய காலத்திலிருந்தே எல்லா விருதுகளுக்கும் என்னுடைய படைப்புகளை அனுப்புவேன். இப்போதுதான் முதன்முறையாக விருது கிடைத்திருக்கிறது. அதுவும் விகடன் விருது. இதைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ந்தார் தொடரின் இயக்குநர் செல்வமணி.

தயாரிப்பாளர்கள் அவினாஷ் ஹரிகரன், அரபி ஆத்ரேயா இருவரும் தங்கள் படைப்புக்கு விருது கிடைத்ததைக் குறிப்பிட்டு பெருமிதப்பட்டனர்.

* ரிசார்ட் (Resort) வெப் சீரீஸ் டீமுக்கு `Best Web Series – Long Forma’t விருதைத் திரைப்பட இயக்குநர் ஹெச்.வினோத் வழங்க, ஸ்ரீ பேபி பிராப்பர்ட்டீஸ் & ஜென்விஸ்டாஸ் ரியால்ட்டி சிஇஓ ஓம் பிரகாஷ், மேனேஜிங் டைரக்டர் சதீஷ்குமார் உடன் இணைந்து நினைவுப்பரிசு வழங்கினர்.

விஜி சாரோன் பிலிப் குடும்பத்தினர்
பாரி இளவழகன், பூஜா, மகேஷ், காந்த் (ஹப்கிராஃப்ட்)
பாரி இளவழகன், `Goofygen’ சுதர்சன்

தொடர்ந்து பேசிய ‘ரிசார்ட்’ தயாரிப்பாளர் வெங்கடேஷ்பாபு, “எங்கள் தொடருக்கு விகடன் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வெற்றி இயக்குநர், எழுத்தாளர், கேமராமேன், எடிட்டர், இசைக்குழு உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழில்நுட்பக்குழுவின் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம்” என மகிழ்ந்தார்.

இந்தத் தொடரில் நடித்த நடிகர் ரகுபதி, “விகடன் மேடையில் முன்பு விளம்பரதாரராக நின்ற நிலையில், தற்போது வெற்றிபெற்ற வெப் சீரீஸின் நடிகராக நிற்பது மகிழ்ச்சியளிப்பதாக’’ தெரிவித்தார். இயக்குநர் பிரவீன் பென்னட், ‘ரிசார்ட்’ தொடருக்காகச் சுமார் இரண்டு ஆண்டுகள் உழைத்ததாகவும், அதில் ஒன்றரை ஆண்டுகள் திரைக்கதை உருவாக்கத்துக்கே செலவானதாகவும் தெரிவித்தார். மேலும், ‘ரிசார்ட்’ வெப் தொடருக்கு இந்திய அளவில் 100 மில்லியன் பார்வைகள் கிடைத்திருப்பதாகவும், தமிழ் தொடராக உருவாகி இந்தி, தெலுங்கு, மலையாள ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்றும் பெருமிதமாகத் தெரிவித்தார்.

* அன்றாட நிகழ்வுகளை அசத்தலான டைமிங்குடன் நகைச்சுவை `ஸ்கிட்’களாக மாற்றிப் பார்வையாளர்களைக் கவர்ந்த ‘காத்தாடி கிளப்’ குழுவுக்கு ‘Best Entertainment Channel’ விருதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வழங்க, ரூபிஅபெக்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆர்.சந்திரசேகரன் உடன் இணைந்து நினைவுப்பரிசு வழங்கினார்.

“இவர்கள் செய்த போலீஸ் ஸ்கிட் அற்புதமான டைமிங்குடன் இருந்தது. லொகேஷனைப் பற்றிக் கவலைப்படாமல் க்ளோஸப்பிலேயே அனைத்தையும் செய்வார்கள். இத்தனை பேரைக் கவர்ந்திருப்பதற்கு இவர்களின் திறமைதான் காரணம்” எனப் பாராட்டினார் முருகதாஸ்.

விருதைப் பெற்றுக்கொண்ட ஜோசப், “சிடுமூஞ்சி சேகர் கதாபாத்திரத்தை எங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் பெட்டிக்கடைக்காரரைப் பார்த்துத்தான் உருவாக்கினோம். `கேப்டன் அமெரிக்கா – அயர்ன் மேன்’ சண்டைபோல எங்களுக்குள்ளேயே அடிக்கடி சண்டை நடக்கும். அதையே கன்டென்ட்டாக மாற்றினோம். காத்தாடியை எல்லோராலும்விட முடியும்; காத்தாடியால் மேலிருந்து எல்லாவற்றையும் பார்க்கவும் முடியும். அதனால்தான் ‘Kaathadi Club’ எனப் பெயர் வைத்தோம்” என்றார்.

`வில்லேஜ் குக்கிங் சேனல்’ குழுவினர், அமைச்சர் ராஜ்மோகன், டாக்டர் ஆச்சா ஆறுமுகசாமி (அபாக்சிஸ் ஹாஸ்பிடல்ஸ்)
ரம்யா பாண்டியன், `Peppa Foodie’ கணேஷ் ராம்

* சமையலைத் தனது அடையாளமாக மாற்றி, டிஜிட்டல் உலகில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிய ‘Samayal with Sharon’ சேனல் விஜி சாரோன் பிலிப்புக்கு ‘Best Cooking Channel’ விருதை சௌமியா அன்புமணி வழங்க, ஸ்ரீபேபி பிராப்பர்ட்டீஸ் & ஜென்விஸ்டாஸ் ரியால்ட்டி சிஇஓ ஓம் பிரகாஷ் இணைந்து நினைவுப்பரிசு வழங்கினார்.

“நான் சமைக்கவே மாட்டேன். ஆனால், சமையல் சேனல்களை விரும்பிப் பார்ப்பேன். சமையல் என்பது ஒரு கலை. குழந்தைகளுக்குப் பசித்தால் முதலில் அம்மாவைத்தான் தேடுவார்கள்’’ எனச் சமையலின் முக்கியத்துவத்தைப் பகிர்ந்தார் சௌமியா.

“சில நண்பர்கள் என்னைப் பேராசிரியராகச் சொன்னார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. `பேராசிரியராகவேண்டியவள் சமைத்துக் கொண்டிருக்கிறாயே…’ என வருத்தப்பட்டார்கள். ஆனாலும் நம்பிக்கையுடன் இதைத் தொடர்ந்தேன். சமையல் சேனலுக்குக்கூட மனதைப் புண்படுத்தும் கமென்ட்டுகள் வரும். சமையலறையைவைத்து, பெண்களைத் தாழ்வாகப் பேசுவார்கள். ஆனால், அதே சமையலறையைவைத்தே ஒரு பெண்ணால் இந்த மேடைக்கு வர முடியும்” என அழுத்தமாகச் சொன்னார் சாரோன்.

‘குடும்பம், நகைச்சுவை, அன்றாட வாழ்க்கையை மையப்படுத்திய வீடியோக்களால் கோடிக்கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைந்த நாகராஜ்-சங்கீதா தம்பதிக்கு ‘Best Couple Creator’ விருதை பிரஜின் – சாண்ட்ரா தம்பதி வழங்கினர்.

மேடையில் பேசிய சாண்ட்ரா, “ `பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு எதிர்கொண்ட கடுமையான விமர்சனங்களை நினைவுகூர்ந்தார். “ ‘சோஷியல் மீடியா பக்கமே செல்ல வேண்டாம்; எதிர்கொள்ள முடியாத அளவுக்கு வெறுப்பும், நெகட்டிவ் கமென்ட்டுகளும் இருக்கும்’ என்றார்கள். ஆனால், நான் ஓடத் தயாராக இல்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அந்த இக்கட்டான நிலையிலிருந்து மெதுவாக வெளியே வந்துதான் இன்று புதிய படங்களில் நடித்திருக்கிறேன்” என்றார்.

விருதைப் பெற்றுக்கொண்ட சங்கீதா, “இந்த விருதுக்கு முக்கியக் காரணம் எங்கள் 12 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள். அப்பா, அம்மா, மாமனார், குழந்தைகள் என எங்களுடன் இருந்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. விகடன் போன்ற பெரிய நிறுவனத்திடமிருந்து அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது” என நெகிழ்ந்தார்.

‘‘Tamil Trekker’ சேனல் மூலம் எல்லைகள் கடந்து புதிய நாடுகள், மனிதர்கள், உணவுகள், கலாசாரங்களைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்த புவனிதரனுக்கு ‘Best Travel Vlogger’ விருதை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வழங்கினார்.

“நிறைய டிராவல் கிரியேட்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். முதலில் பயணம் செய்யும்போது ஜாலியாக இருந்தது. இப்போது பயணம் செய்வதே வேலையாகிவிட்டதால் கொஞ்சம் அயர்ச்சியாக இருக்கிறது. அதனால்தான் புதிய மனிதர்கள், புதிய கலாசாரம், புதிய உணவு எனத் தொடர்ந்து தேடிச் செல்கிறேன்’’ என்றார் புவனிதரன்.

இரா.சரவணன், யுவராஜ் கணேசன், ‘குற்றம் புரிந்தவன்’ குழுவினர், ஆர்.சந்திரசேகரன், துரைசிங்கம் (ரூபிஅபெக்ஸ்)
பிரஜின் – சான்ட்ரா, நாகராஜ்-சங்கீதா
சுதர்சன் காந்தி, கிகி

‘கேப்டன் பிரபாகரன்’ படத்துக்காக 35,000 கி.மீ பயணம் செய்ததாகக் கூறிய செல்வமணி, “ஹனிமூன் சென்றபோதுகூட லொகேஷன் பார்க்கும் மனநிலையில்தான் இருப்பேன். ‘ஹனிமூன் வந்தீர்களா, லொகேஷன் பார்க்க வந்தீர்களா?’ என ரோஜா கிண்டலாகக் கேட்பார்” என மேடையைக் கலகலப்பாக்கினார்.

* அர்த்தமுள்ள உரையாடல்களின் வழியே பல்வேறு மனிதர்களின் அனுபவங்களையும், எண்ணங்களையும் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்த கோபிநாத்துக்கு ‘Sensational Channel of the Year’ விருதை சௌமியா அன்புமணி வழங்க, புராமினன்ஸ் விண்டோ சிஸ்டம் இயக்குநர் இந்துகுமாரி இனியன் உடன் இணைந்து நினைவுப்பரிசு வழங்கினார்.

“கோபிநாத்தின் நிகழ்ச்சிகளைத் தமிழ்நாடே பார்க்கிறது. அன்புமணி அமைச்சராக இருந்தபோது, சேனல் லைவ்வில் சவாலான கேள்விகளைக் கேட்டு அவருடைய சிறந்த பக்கத்தை வெளிக்காட்டினார்” எனப் பாராட்டிய சௌமியாவிடம், முதலமைச்சர் விஜய் பதவியேற்ற புகைப்படத்தைக் காட்டியதும், “பதவியேற்பு விழா ரொம்பவே நன்றாக இருந்தது. ஒரு வாரம் என்ன நடக்குமெனத் தெரியாமல் மக்கள் அத்தனை பேரும் டி.வி முன்பு அமர்ந்திருந்தனர். மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் அவருக்கு வாழ்த்துகள். லஞ்சம், ஊழலுக்கு எதிராக நிறைய விஷயங்களைச் செய்கிறார். அதன் பலன் மக்களைச் சென்று சேர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். மருத்துவர் ராமதாஸும் மருத்துவர் அன்புமணியும் கட்டியணைத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்தவர், “நெகிழ்ச்சியான தருணம். பிரிந்தவர் கூடினால் பேச்சு வராது” என்று நெகிழ்ந்தார்.

விகடனிடமிருந்து இதுவரை ஆறு விருதுகளை வாங்கியிருப்பதாகச் சொன்ன கோபிநாத், “யாரையும் தோற்கடிப்பதற்காக வேலை செய்யாமல், உங்களை நீங்களே தோற்கடிப்பதற்காக வேலை செய்யுங்கள். நீங்கள் தவிர்க்கவே முடியாத ஆளாக மாறினால் யாராலும் உங்களுக்கு ‘நோ’ சொல்ல முடியாது” என இளம் படைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

“தோனியைப் பேட்டி எடுத்தால் என்ன கேட்பீர்கள்?” என்று தொகுப்பாளர்கள் கேட்க, “எப்படிய்யா இப்படி இருக்க?” என்பதுதான் தனது முதல் கேள்வியாக இருக்கும் என்றார்.

சர்ப்ரைஸாக மேடையேறிய கோபிநாத்தின் அண்ணன், பிரபாகரன் சந்திரன், எட்டாம் வகுப்பில் கோபிநாத் கேட்டும் வாங்கிக்கொடுக்க முடியாத ஃபவுண்டன் பேனாவை இப்போது பரிசாக வழங்கினார். “கோபியை ஒரு தம்பியாக மட்டுமே பார்த்திருக்கிறேன். கொஞ்சம் விலகி நின்று பார்க்கும்போதுதான் அவர் இவ்வளவு பெரிய அறிவாளியா என வியப்பாக இருக்கிறது. ஒரு அண்ணனாகப் பெருமைப்படுகிறேன்” என்று அகம் மகிழ்ந்தார்.

* தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து உணவுகளையும், அவற்றின் தனித்துவத்தையும் பதிவுசெய்த Peppa Foodie சேனலின் கணேஷ் ராமுக்கு ‘Best Food Reviewer’ விருதை நடிகை ரம்யா பாண்டியன் வழங்கினார்.

“டிஜிட்டல் உலகம் மிகவும் பெரியதும் சக்தி வாய்ந்ததுமாக இருக்கிறது. அதன் திரை சிறியதாகத் தெரிந்தாலும், அதன் ரீச் மிகப்பெரியது. நாம் விரும்பிய துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் நூறு சதவிகித உழைப்பையும் ஆர்வத்தையும் கொடுத்தால் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்” என்றார் ரம்யா பாண்டியன்.

விருதைப் பெற்றுக்கொண்ட கணேஷ் ராம், “ ‘சென்னை மட்டுமின்றி மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளின் உணவுகளைப் பதிவுசெய்திருக்கிறேன். ஒவ்வொரு ஊருக்கும் தனித்துவமான உணவும் கலாசாரமும் இருக்கின்றன. திருமணங்களில் பரிமாறப்படும் பாரம்பர்ய உணவுகள் உள்ளிட்டவற்றை இன்னும் விரிவாகப் பதிவுசெய்ய வேண்டும்’ எனத் தனது அடுத்த இலக்கைப் பகிர்ந்தார்.

– தொடர்ச்சி அடுத்த இதழில்…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *