தமிழகத்தில் தீவிரமடையும் காய்ச்சல்: அறிகுறிகளும், தற்காக்கும் வழிமுறைகளும்! – மருத்துவர் விளக்கம்

Spread the love

தமிழ்நாடு முழுவதும் தற்போது இன்ஃப்ளூயன்சா மற்றும் டெங்கு போன்ற காய்ச்சல்கள் அதிவேகமாகப் பரவி வருகின்றன.

பொதுமக்கள் மத்தியில் காய்ச்சல் குறித்த அச்சம் நிலவும் சூழலில், இதன் அறிகுறிகள், பரிசோதனைகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் சிவராம கண்ணனிடம் பேசினோம்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், ” செப்டம்பர் மாதம் பொதுவாகவே காய்ச்சல் பரவும் காலம். தற்போது இன்ஃப்ளூயன்சா ஃப்ளூ மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகிய இரண்டும் தான் பரவி வருகின்றன.

பொது மருத்துவர் சிவராம கண்ணன்
பொது மருத்துவர் சிவராம கண்ணன்

ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தொண்டை வலி, சலி, காய்ச்சல் மற்றும் உடல் வலியோடு மருத்துவமனைக்கு வருவார்கள்.

ஆனால் டெங்கு காய்ச்சல் உள்ளவர்களுக்கு வேறு எந்த அறிகுறிகளும் இன்றி 102°F முதல் 104°F வரை கடுமையான காய்ச்சல் மட்டுமே இருக்கும்.

தொடக்கத்தில் 48 மணி நேரத்திற்கு பாராசிட்டமால் மருந்து மட்டுமே வழங்கப்படும். அதற்குள் நோயின் தன்மையை அறிந்து கொள்ள முடியும். சளி மாதிரியைக் கொண்டு ‘ஃப்ளூ பேனல்’ பரிசோதனையும், ரத்த மாதிரியைக் கொண்டு ‘டெங்கு NS1’ பரிசோதனையும் செய்யப்படும்.

6 மணி நேரத்திற்குள் இவ்விரு பரிசோதனை முடிவுகளும் கிடைத்துவிடும் என்பதால், அதற்கேற்ப சிகிச்சையைத் தொடங்கலாம். ஃப்ளூ காய்ச்சலைத் தொடக்கத்திலேயே கண்டறிந்தால் உரிய மாத்திரைகள் மூலம் பக்கவிளைவுகளின்றி விரைவாகக் குணப்படுத்தி விடலாம்.

முதியவர்களுக்கு இக்காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக இருக்கக்கூடும். எனவே அவர்கள் ஆண்டிற்கு ஒருமுறை செலுத்தப்படும் ஃப்ளூ தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது நல்லது. இத்தடுப்பூசி நான்கு வகையான நச்சுயிரிகளிலிருந்து ஓராண்டு காலத்திற்குப் பாதுகாப்பளிக்கும்.

டெங்கு
டெங்கு

டெங்கு காய்ச்சல் என்பது 10 நாட்கள் நீடிக்கக்கூடிய நோய். முதல் 5 நாட்களுக்குக் காய்ச்சல் இருக்கும்; ஆறாம் நாளிலிருந்து தான் ரத்தத் தட்டணுக்களின் (Platelets) எண்ணிக்கை குறையத் தொடங்கும். தட்டணுக்களின் எண்ணிக்கை 10,000-க்கும் கீழ் குறையும் போதோ அல்லது ரத்தப்போக்கு ஏற்படும் போதோ தான் பாதிப்பு தீவிரமடையும்.

இந்நோயாளிகளால் உணவருந்த முடியாத சூழல் ஏற்படுவதால் டீஹைடிரேஷன் உண்டாகும். எனவே அதிகளவு நீர்ம ஆகாரங்களைக் கொடுத்துத் தட்டணுக்களின் அளவைக் கண்காணிக்க வேண்டும். எட்டாம் நாளுக்குப் பிறகு தட்டணுக்களின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கி 9 அல்லது 10-ஆம் நாளில் நோயாளி பூரண குணமடைவார்.

டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல்

டெங்குவைத் தவிர்க்க வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க வேண்டும். ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் இருக்க பாதிக்கப்பட்டவரைத் தனிமைப்படுத்தி, முகக்கவசம் அணிந்து, கைகளைத் தூய்மையாகக் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும்” என்று விளக்கம் அளித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *