டெல்லியிலிருந்து கிளம்பிய ஸ்விட்சர்லாந்து விமானம்; இன்ஜினில் தீ பிடித்து விபத்து: 6 பயணிகள் காயம்!

Spread the love

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூரிச் நகருக்கு Flight No. LX147 என்ற விமானம் புறப்படத்தயாராக இருந்தது. விமானத்தில் 223 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை விமானம் புறப்பட்டபோது அதன் ஒரு இன்ஜின் வேலை செய்யவில்லை. அதோடு அந்த இன்ஜின் உடனே தீப்பிடித்துக்கொண்டது. இன்ஜினில் இருந்து புகை அதிக அளவில் வெளியேறியது. இதனால் பைலட் உடனே விமானத்தை மேற்கொண்டு இயக்காமல் நிறுத்தினார். விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் விமானத்தில் இருந்த 6 பயணிகள் காயம் அடைந்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் அவசர வழி வழியாக பத்திரமாக மீட்டனர்.

காயம் அடைந்த பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீப்பிடித்த விமான காட்சிகள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது.

விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பயணிகளுக்கு வேறு விமானத்தில் முன்பதிவு செய்து கொடுத்தல் அல்லது ஹோட்டல்களில் அறை முன்பதிவு செய்து கொடுத்தல் போன்ற வேலைகளை ஏர்லைன்ஸ் நிர்வாகம் செய்து வருகிறது.

இது குறித்து ஸ்விஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,”‘டெல்லியில் விமானம் LX147 தொடர்பான ஒரு சம்பவம் குறித்து நாங்கள் அறிவோம். இதில் சம்பந்தப்பட்ட விமானம் Airbus A330 வகையைச் சேர்ந்தது. அந்த விமானத்தில் 228 பயணிகளும், நான்கு பச்சிளம் குழந்தைகளும் பயணித்தனர். சம்பந்தப்பட்ட பயணிகளை உடனே தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களுக்கு தொடர்பு அட்டைகளை கொடுத்துள்ளோம்.

இத்தகைய சூழல் இதில் தொடர்புடைய அனைவருக்கும் மன உளைச்சலை அளிக்கக்கூடியதாகும். எங்கள் உள்ளூர் குழுக்கள் சம்பவ இடத்திலேயே எங்கள் பயணிகளைக் கவனித்து வருவதுடன், அவர்களுடன் நேரடித் தொடர்பிலும் உள்ளனர்”என்று குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விமானத்தை சரி செய்ய ஸ்விட்சர்லாந்தில் இருந்து தொழில் நுட்ப குழு வருகை தர இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *