டெல்லி அணியில் பயிற்சியாளராகக் களம் இறங்கும் யுவராஜ் சிங்! மீண்டும் இணையும் கங்குலி – யுவி கூட்டணி | Yuvraj Singh: Legend Yuvraj Singh Ready to Kickstart His Official IPL Coaching Journey with Delhi Capitals under Sourav Ganguly

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் யுவராஜ் சிங் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. டெல்லி அணியின் இயக்குநராக சவுரவ் கங்குலியும், அவரின் கீழ் தலைமைப் பயிற்சியாளராக யுவராஜ் சிங் செயல்பட உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் இதுவரை டெல்லி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதே இல்லை. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஒரேயொரு முறை மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. இதனை மாற்றிக் காட்ட டெல்லி அணியின் உரிமையாளர்கள் தீவிரமாக இருக்கின்றனர். அதற்கான காலம் கூடி வந்திருக்கிறது.

Yuvraj Singh

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நிர்வாகக் கட்டுப்பாட்டை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஜேஎஸ்டபிள்யூ குழுமம் (JSW Group) கையில் எடுக்கவுள்ள நிலையில், அணியை வழிநடத்தவுள்ள சவுரவ் கங்குலியுடன் இணைந்து யுவராஜ் சிங் பணியாற்றவுள்ளார். இந்தத் தகவலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

44 வயதாகும் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பல்வேறு இளம் வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசகராக செயல்பட்டு வந்துள்ளார். அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், அப்துல் சமத், சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் போன்ற பல இளம் வீரர்களின் பேட்டிங் திறனை மேம்படுத்த யுவராஜ் சிங் முக்கிய உதவி செய்துள்ளார்.

குறிப்பாக, இளம் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் அசுரத்தனமான வளர்ச்சிக்கு யுவராஜ் சிங்கின் தீவிரப் பயிற்சியே முக்கிய காரணம் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் யுவராஜ் சிங் இணைவது இதுவே முதல்முறையாகும்.

யுவராஜ் சிங்கின் தனித்துவமான பயிற்சி முறையைக் கவனித்த பல ஐபிஎல் நிறுவனங்கள் அவரைத் தங்கள் அணியில் சேர்க்க ஆர்வம் காட்டி வந்தன. இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அந்த வாய்ப்பைக் கைப்பற்றியுள்ளது. யுவராஜ் சிங்குடன் விளையாடிய ஆஷிஷ் நெஹ்ரா, ஜாகீர் கான், சேவாக் ஆகியோர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பயிற்சியாளர்களாக முத்திரை பதித்துவிட்டனர்.

யுவராஜ் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது சற்று தாமதமாக இருந்தாலும், இளம் வீரர்களுடன் களத்தில் அதிக நேரம் செலவிட்டு இந்த பணியின் தேவைகளை நன்கு புரிந்து வைத்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு டெல்லி அணியுடன் இணைந்து பணியாற்றுவார் என்று தெரிகிறது. இதனால் டெல்லி அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *