டெல்லி மாணவர்கள் போராட்டம்: “ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாக மாறியிருக்கிறது" – பா.ரஞ்சித்

Spread the love

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.

இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது.

இந்தப் போராட்டத்தைக் கலைக்கும் வகையில் ஆளும் பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு, தடியடி தாக்குதல் எனக் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறது.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் பா.ஜ.க அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லி மாணவர்கள் போராட்டம்

அதன் அடிப்படையில் இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், “அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்குப் பொறுப்பேற்க கேட்டுத் தொடங்கிய ஒரு குரல், இன்றைக்கு ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாகவும், போராட்டமாகவும் மாறியிருக்கிறது.

லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் ஓர் அரசாங்கத்தை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று இந்தத் தலைமுறை தெளிவாகச் சொல்லிவிட்டது.

டெல்லி வீதிகள் முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வரை போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீட் தேர்வுக்கு எதிராகக் குரலெழுப்பி தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்த கலைஞர் அறிவு முதல், நீதியைத் தேடும் மாணவர்கள், பெற்றோர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து இதை ஒரு நிஜமான மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறார்கள்.

தொடர்ந்து தோற்றுப்போகும் நமது பொதுக் கல்வி முறைக்கு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும், மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்ற அனைவரின் ஆதங்கத்தையே இது காட்டுகிறது.

அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது கொடூரமான வன்முறையைப் பிரயோகிப்பது, நியாயமான ஜனநாயகக் கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசிடம் வழியில்லை என்பதையே அம்பலப்படுத்துகிறது. அடக்குமுறையைக் கொண்டு ஒருபோதும் பொறுப்புக்கூறலை மூடிமறைத்துவிட முடியாது.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

அதேவேளையில், உலகெங்கும் வாழும் இந்திய இளைஞர்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவது மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு இளைஞருக்குமான போராட்டம் இது.

காவல்துறையின் வன்முறைக்கு எதிராகவும், அரசியலமைப்பு தந்த ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வரும் சகோதரர் சந்திர சேகர் ஆசாத் அவர்களுக்கு எனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர்கள், சமூகப் போராளிகள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள், மக்கள் இயக்கங்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொரு குடிமகனும், நாடு முழுவதும் நடக்கும் இந்தப் போராட்டங்களுக்குத் தயக்கமின்றி ஆதரவாக நிற்க வேண்டிய நேரமிது.

பொறுப்புக்கூறல், நீதி, மற்றும் மக்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு உண்மையாகச் சேவை செய்யும் பொதுக் கல்வி முறைக்காக நாம் அனைவரும் உரக்கக் குரலெழுப்புவோம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *