தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.
பாலிவுட்டில் “சிங்கம்’, ‘தோ லஃப்சோன் கி கஹானி’ போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றபோதிலும், சமீபகாலமாக அவர் தென்னிந்திய படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் சுபங்கர் மிஸ்ராவின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரிடம், `இந்திப் படங்களை ஏன் இவ்வளவு கவனமாகத் தேர்ந்தெடுக்கிறீர்?, தென்னிந்திய சினிமாவிடம் பாலிவுட் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்ன?, திரைத்துறையில் பெண்களைச் சித்தரிக்கும் விதம் எவ்வாறு மாறியுள்ளது?’ என்பன குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகை காஜல் அகர்வால், “எனக்கு எப்போதும் வேலையின் தரம்தான் முக்கியம். தென்னிந்திய சினிமாவில் எனக்குக் கிடைத்த தரமான கதாபாத்திரங்கள் பாலிவுட்டில் கிடைக்கவில்லை. எண்ணிக்கையை விட தரத்திற்கே நான் முன்னுரிமை கொடுத்தேன்.
தென்னிந்திய சினிமா அத்தகைய வாய்ப்புகளை எனக்குத் தாராளமாக வழங்கியபோது, நான் ஏன் பாலிவுட்டில் சாதாரணமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்?” என்றார்.