கன்னியாகுமரி மாவட்டம், மேட்டுக்கடை பகுதியில் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகள் மது பாட்டில் கொண்டுவந்து, பள்ளி வகுப்பறை வராண்டாவில் வைத்து மதுவை அருந்தியுள்ளனர். மாணவிகள் மது குடிப்பதை உடன் இருந்த மற்றொரு மாணவி செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்றதாகக் கூறப்படும் அந்த நிகழ்வின் வீடியோ, தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்டாலின் தக்கலை அரசுப் பள்ளியில் இன்று விசாரணை நடத்தினார். பெண் காவலர்கள் உதவியுடன் மது அருந்திய மாணவிகளிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு வெளியில் இருந்து இளைஞர் ஒருவர் மது வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தக்கலை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலின் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவிகள் இருவரும் சீருடையில் மது அருந்திய காட்சிகளை சக பள்ளி மாணவர்களே செல்போனில் வீடியோ பதிவு செய்து, கடந்த ஜூலை மாதமே பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலினிடம் காட்டியுள்ளனர். இரண்டு மாணவிகளையும் அழைத்து விசாரித்த தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலின், உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. மாறாக மது அருந்தும் காட்சிகள் தங்களது வீட்டில் வைத்து அரங்கேறியதாக மாணவிகளிடம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பிவைத்துள்ளார். இப்போது மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியானதும், ஏற்கெனவே மாணவிகள் எழுதிக்கொடுத்த கடிதத்தை காண்பித்து தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.