நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய தமிழக பால்வளத்துறை அமைச்சருமான திருமதி விஜயலட்சுமி, 1975 ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சின்னசாமி – ஈஸ்வரி என்ற விவசாயி தம்பதியினருக்குப் பிறந்தார்.
1990 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பும், 1992 ஆம் ஆண்டு கோவை தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பும் முடித்துள்ளார். பின்னர் 1998 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் பகுதியை சார்ந்த பலராமன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
பிரவீன் குமார், விஷ்ணுகுமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சுயதொழிலுக்காக குமாரபாளையம் பகுதியில் வசிக்கும் தனது உறவினர்களின் அரவணைப்புடன் ஆலங்காட்டுவலசு என்னும் பகுதியில் குடிபெயர்ந்தார். இங்கு தனியார் பள்ளியில் கணக்களராகப் பணிபுரிந்த காலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்து பல்வேறு சேவைகள் செய்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றி கழகமாக அறிவிக்கப்பட்டபோது, அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கைப் பிரிவிற்கு மாநிலச் செயலாளராக அறிவிக்கப்பட்டு தீவிரமாகப் பணியாற்றினார்.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டு திறம்படச் செயலாற்றியதை அடுத்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது தொடக்கம் முதலே முன்னிலை வகித்த இவர், தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இரண்டு முறை அமைச்சராகவும் இருந்த அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணியை விட சுமார் 8,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்டு வந்த குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வசமானது.
இதனைத் தொடர்ந்து புதிதாக ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஜோசப் முதல்வராகப் பொறுப்பேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி பால்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.