தங்க மகள் மனிஷா: `போராடினால் நீ வெல்லலாம்.!’ – உலக மல்யுத்த சாம்பியன் ஆன முதல் இந்தியப் பெண்! | Manisha Bhanwala becomes India’s first woman world wrestling champion

Spread the love

“பர்ஸ்ட் யாரு வராங்கிறது முக்கியம் இல்ல… லாஸ்ட்ல யாரு பர்ஸ்ட் வராங்கிறதுதான் முக்கியம்!” என்ற சினிமா டயலாக்குக்கு அப்படியே பொருந்தும் வகையில் அமைந்திருக்கிறது மனிஷா பன்வாலாவின் வெற்றி.

0-6 என்ற புள்ளி கணக்கில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்தாலும், மனம் தளராமல் இறுதிவரை போராடிய மனிஷா, கடைசியில் 8-6 என்ற புள்ளி கணக்கில் மிரட்டலான வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலமாக அவர் படைத்திருக்கும் சாதனை சாதாரணமானது அல்ல. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார். பெண்களுக்கான 59 கிலோ எடைப் பிரிவில், கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பான் அமெரிக்க சாம்பியனான அபிகெய்ல் நெட்டேவை வீழ்த்தி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இந்தத் தங்கத்தின் மூலமாக 16 ஆண்டுகாலக் காத்திருப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மனிஷா! அதாவது, 2010-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னதாக 2010-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காகத் தங்கம் வென்று சாதனை படைத்தவர் சுஷில் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதே தொடரில் நீலம் சிரோஹி (50 கிலோ), காஜல் தோச்சக் (76 கிலோ) ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். ஒரே உலக சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றதும் இதுவே முதல்முறை.மேலும், இதே தொடரில் தானு சர்மா (72 கிலோ) வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார்.

இதன் மூலம் இந்திய மகளிர் அணி ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கங்களைக் கைப்பற்றி இந்தியப் பெண்கள் மல்யுத்தத்திற்குப் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறது. 0-6 என்ற சரிவிலிருந்து 8-6 என்ற வெற்றியை நோக்கிப் பயணித்த மனிஷா, மனம் தளராமல் போராடினால் வரலாற்றையே மாற்றி எழுத முடியும் என்பதை உலக அரங்கில் நிரூபித்திருக்கிறார்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *