சக்கராயிக்குக் காவலாக உள்ள வீரன், சக்கராயி கோயிலுக்கு வெளியே வலப்புறத்தில் தம் சக்தியரோடு நிலைத்துள்ளார். இவருக்கு மட்டும் திருவிழா நேரத்தில் விசேஷ படையல் உண்டு. அத்தகு அசைவப் படையல் நிகழும் நேரத்தில், கோயில் மூலஸ்தானத்துக் கதவுகளை மூடி நடைசாற்றி விடுவது மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
திருக்கோயிலின் அருகிலுள்ள திருக்குளத்திற்கு `சக்கராயி குளம்’ என்று பெயர். தேவியின் அறுபட்ட சிரம் இக்குளத்தில்தான் வீழ்ந்துள்ளது என்பது நம்பிக்கை.
திருமணம் ஆன பெண்களும், கர்ப்பிணிகளும் கோயில் வளாகத்திலுள்ள வேப்பமரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.
பெரும்பாலும் கர்ப்பிணிகள் சுகப்பிரசவத்திற்காக வளையல் கட்டி வேண்டுதல் செய்வதுதான் இங்கு அதிகம். இவ்வாறு பிரார்த்தனை செய்பவருக்கு கருச்சிதைவோ, குறைப்பிரசவமோ ஏற்படுவது கிடையாது என்பது உறுதி.
அம்மனின் அருளால் பிரசவம் நல்லபடியே நடந்து குழந்தை பிறந்தபிறகு, குழந்தையுடன் வந்து இவள் சந்நிதியில் குழந்தையைக் கிடத்தி நேர்த்திக் கடனைத் ஆற்றுவது அவசியம்.
அதேபோல் அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்து, புது சிவப்புப் புடவை மற்றும் பூச்சரங்களுடன், எலுமிச்சை மாலை சாற்றி, சிவப்பு அரளிப்பூக்களால் அர்ச்சித்து வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கிறது.
சக்கராயி அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப் பொங்கலைப் படைத்து விநியோகம் செய்தால், சக்கராயி மனங்குளிர்ந்து மகவினை ஆசிர்வதிப்பாள் என்கிறார்கள். தவிர கருப்பைக் கோளாறு கள்,சூதகக் கட்டிகள், மெனோபாஸ் போன்ற பாதிப்புகளால் அவதிப் படுபவர்களும் இவ்வன்னைக்கு குங்குமார்ச்சனை செய்து வழிபட, கைமேல் பலன் கிடைப்பது கண்கூடு.