International
oi-Hema Vandhana
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த டாங் மின் என்ற பெண்ணுகுகு 48 வயதாகிறது. இவர் ஒரு டாக்டர்.. 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டராக பணியாற்றுபவர்.. .நல்ல வருமானம்.. சமூகத்தில் இந்த டாக்டருக்கு நல்ல மதிப்பு.. ஆனால், திடீரென டாக்டர் பணியை விட்டுவிட்டு, பன் விற்க ஆரம்பித்துவிட்டாராம்.. ஏன் தெரியுமா? இதை பற்றிதான் சீனா முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!
டாங் மின் 1999-ம் ஆண்டு வூஹான் பல்கலைக்கழக மருத்துவ படிப்பை முடித்தார். அதன் பிறகு ஷென்சென் நகரில் மகளிர் மருத்துவ நிபுணராக தனது பணியைத் தொடங்கினார். சில வருடங்களுக்கு பிறகு வூஹானுக்குத் திரும்பிய அவர், தனது அம்மா நடத்தி வந்த தனியார் மருத்துவமனையில் உதவி செய்தார்.

சீன பெண் டாக்டர்
ஒருகட்டத்தில் அம்மா ஓய்வு பெற்றுவிட்டார்.. அதனால் அந்த மருத்துவமனை பணியை முடித்துக்கொண்டு, ஹூபே மாகாணத்தின் தியான்மென் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றினார்.. அத்துடன் சட்டப்பூர்வ பொறுப்பாளராகவும் பணியாற்றினார். இங்குதான் பிரச்சினை ஆரம்பமானது.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமே ஒரு டாக்டரின் வேலை கிடையாது.. மருத்துவம் சாராத நிர்வாகப் பணிகள், பல்வேறு அரசு அமைப்புகளின் சோதனைகள், மருத்துவமனையில் அடிக்கடி நடைபெற்றது.. இதுபோன்ற சோதனைகள், அது தொடர்பான கூடுதல் பொறுப்புகள் டாங் மினுக்கு அதிகமாகிவிட்டன..
அதாவது டாக்டருக்கும், நோயாளிகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டால், சட்டப்பூர்வ பொறுப்பாளராக அதற்கும் முழுப் பொறுப்பையும் தானே ஏற்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் கடுமையான மன அழுத்தத்துக்கும் ஆளானார். கடைசியில் இந்த டாக்டர் தொழிலையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
பன் தயார் செய்த டாக்டர்
இந்த நிலையில்தான் 2023-ல் டாக்டர் பணியை கைவிட்டார்.. நண்பரின் குடும்பத்தினர் பன் கடை வைத்து ஓஹோவென்று பிசினஸ் செய்வதை பார்த்ததுமே, டாங் மினுக்கும், பன் கடை மீது ஆசை வந்துவிட்டது.. உடனே தானும் அந்தத் தொழிலில் முதலீடு செய்தார்.. சமையலுக்கு ஒருவரை வேலைக்கு வைத்து கொண்டு, பிசினஸை ஆரம்பித்தார்.. ஆனால், அந்த சமையல்காரர் திடீரென வேலையை விட்டு போய்விட்டார்.
இனி இன்னொரு சமையல்காரரை வைத்தால், அவரும் ஓடிவிட்டால் என்ன செய்வது? இதற்கு பேசாமல் நாமளே பன் தயாரிக்க கற்றுக்கொள்வதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்தார்.. சில நாட்களிலேயே டாங் மினே பன் தயாரிக்கக் கற்றுக்கொண்டார். மாவு பிசைந்து, பன் தயார் செய்து எடுத்தபோது, டாங் மினுக்குள் ஒரு புதிய மகிழ்ச்சி ஏற்பட்டது. உடனே பன் கடையிலேயே மொத்த கவனத்தையும் செலுத்த முடிவு செய்தார்.
இதை பார்த்து டாங் மின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.. பன் சுடறதுக்கா உன்னை டாக்டருக்கு படித்த வைத்தோம்? என்று புலம்பினார்கள்.. இந்த பிசினஸையும் அவர்கள் ஏற்கவில்லை. டாக்டர் என்பது மதிப்பும் மரியாதையும் கொண்ட தொழில் என்பதால், அதை விட்டுவிட்டு பன் கடை நடத்துவதை அவர்கள் துளியும் விரும்பவில்லை.
மகிழ்ச்சியில் டாங் மின்
ஆனால் டாங் மின் தனது முடிவில் உறுதியாக இருந்தார். ‘எனக்கு 50 வயதாகிவிட்டது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்காக நான் வாழ விரும்புகிறேன்” என்று கறாராக சொல்லிவிட்டார்,..
இப்போது தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக பன் கடையில் வேலை செய்கிறார். உடல் சோர்வாக இருந்தாலும், மனதில் அந்த அழுத்தம் இல்லை என்கிறார்… டாக்டராக இருந்தபோது வேலையை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வந்தது. இப்போது பன் கடை நடத்துவது சோர்வாக இருந்தாலும், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார்.
விறுவிறு பிசினஸ்
இப்போது டாங் மின் நடத்திவரும் அந்த பன் கடைக்கு, உணவுத் துறையில் போட்டியும் அதிகமாகி விட்டதாம்.. அவரது கடைக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.. இதோ கடந்த ஜூலை மாதம், தன்னுடைய பன் கடையின் 2-வது கிளையையும் தொடங்கி விட்டார்..
“எப்போதுமே வாழ்க்கைக்கு ஒரே ஒரு பதில் கிடையாது. மாற்றத்தை தொடங்க ஒருபோதும் தாமதம் செய்யக்கூடாது.. என்னால் நடக்க முடியாத நாள் வரட்டும், அதுவரை பன் கடையை நடத்த ஆசைப்படுகிறேன்” என்பதுதான் டாங் மினின் ஸ்ட்ராங் முடிவு…!!