தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாரப்பர் கோயில்: வட கயிலாயம்… ஆயுள் விருத்திதரும் ஆட்கொண்டார் சந்நிதி! | tanjore thiruvaiyaru aiyarappar temple

Spread the love

ஐயாரப்பரை பூஜித்திருந்த 24 ஆதி சைவர்களில் ஒருவர், காசி யாத்திரை சென்று நெடுநாள் வரவில்லை. இதனால் அவருடைய சொத்துகளை ஏனையோர் பங்கிட்டுக்கொண்டு அவருடைய குடும்பத்தினருக்குத் துன்பம் விளைவித்தனர். ஆதிசைவருடைய மனைவியும் மக்களும் ஐயாரப்பனிடம் முறையிட்டனர்.

ஈசன், காசிக்குச் சென்றவருடைய வடிவெடுத்து, கங்கை நீரும் மலரும் கொண்டு, திருவையாற்றில் தம்முடைய சிவலிங்கத்திருமேனியைத் தாமே பூஜித்தார். காணாமல்போனவர் வந்துவிட்டதைக் கண்டு உரிய சொத்துகளைத் திரும்ப அளித்தார்கள் என்பது திருவையாற்று புராணம் கூறும் செய்தி.

இதனால், வருடாந்திர சப்தஸ்தான திருவிழாவில் `ஐயாரப்பர் தம்மைத்தாமே பூசித்தல்” என்ற ஐதிக நிகழ்வு ஐந்தாம் நாள் திருவிழாவாக நிகழ்த்தப்படுகிறது.

அப்பர் பிரான், கயிலைக் காட்சியைக் காணும் பொருட்டு தன் உடல் தேய கயிலை நோக்கி உந்தி நகர்ந்தார். ஈசன் ஆணையால் அங்கிருந்த பொய்கையில் மூழ்கி, திருவையாற்றுத் தடாகத்தில் எழுந்தார். அவர் கோரிக்கைக்கேற்ப ஈசன் அவருக்குக் கயிலைக் காட்சியை அருளினார்.

எனவே, ஐயாறு தரிசனம் செய்தாலே கயிலைத் தரிசனம் செய்ததற்கு இணையான புண்ணியம் கிடைத்திடும் என்பது நம்பிக்கை. திருவையாற்றுப் பதியில், வடகயிலாயம் மற்றும் தென்கயிலாயம் என இரண்டு கயிலாயங்கள் இருப்பது கூடுதல் விசேஷம்.

திருவையாறு ஐயாரப்பர் கோயில்

திருவையாறு ஐயாரப்பர் கோயில்

தென்கயிலாயம், பஞ்சவன் மாதேவி அவர்களால் கட்டப்பெற்றதால் அதற்கு `பஞ்சவன்மாதேவிச்சுரம்’ என்பது பெயர். இது சூரியபுஷ்கரணியின் தென்கரையில், வடக்கு நோக்கிய கற்கோயிலாக அமைந்துள்ளது.

இங்குள்ள மகாமண்டபத்தில் அப்பர் சுவாமிகள் தனித்த சந்நிதியில் எழுந்தருளி இருக்கிறார். இங்கு நடைபெறும் ஆடி அமாவாசைக் கயிலைக் காட்சித் திருவிழா வெகு பிரபலமானது.

வடகயிலாயம், நான்காவது திருச்சுற்றில் வடப்புறத்தில் தனிக்கோயிலை எடுப்பித்தவர் முதலாம் ராஜராஜரின் அரசியான லோகமாதேவி. எனவே, இது `லோகமாதேவிச்சுரம்’ என அழைக்கப்படுகிறது.

ஆலயத்தின் மேற்குப் பிராகாரத்தில் அமைந்துள்ளது, வேலவன் கோட்டம். இவ்விடத்தில் வள்ளி – தெய்வானை சமேதரராக எழுந்தருளியுள்ள முருகர் வில்லேந்தியவராய்க் காட்சி தருகிறார். இவருக்கு தனுசு சுப்பிரமணியர் என்பது திருநாமம். சிவலிங்கத் திருமேனி போன்றே, ஆவுடையாரில் பாணத்திற்குப் பதிலாக விநாயகர் திருமேனி அமைந்துள்ளது விசேஷம்.

திருவையாறு தலத்தில்தான் நந்திக்கு ஈஸ்வரப் பட்டத்துடன் சிவகணங்களின் தலைமைப் பதவியையும், ஆதிகுரு என்கிற தகுதியினையும் பெருமான் அளித்தார். எனவே, இத்தலத்தில் பிரதோஷ காலத்தில் வழிபடுபவருக்குத் தலைமைப் பதவி, உத்தியோக உயர்வு, ஆட்சியதிகார பலம் முதலியவைக் கிடைத்திடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *