Tamilnadu
oi-Halley Karthik
சேலம்: கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8,612 கனஅடியிலிருந்து 9,709 கனஅடியாக அதிகரித்திருக்கிறது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்திருக்கும் நிலையில், அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று மாலை 6 மணிக்கு 7,000 கனஅடியிலிருந்து 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட இருக்கிறது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் நிம்மதியடைந்திருக்கின்றனர்.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கர்நாடகா நமக்கு சரியான நேரத்தில் போதுமான அளவு காவிரி நீரை கொடுக்காததால் குறிப்பிட்ட நாளில் அணையை திறக்க முடியவில்லை. இதனால் டெல்டாவில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. வழக்கமாக 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய குறுவை சாகுபடி இந்த ஆண்டு 2-3 லட்சம் ஏக்கர் பரப்பளவில்தான் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அரிசியின் விலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
மறுபுறம் நீண்ட நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியிருந்தது. இதையடுத்து செப்.1ம் தேதி முதல்வர் விஜய் அணையை திறந்து வைத்தார். தற்போது அணையிலிருந்து வினாடிக்கு 7,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு நீர் திறப்பின் அளவு 10,000 கனஅடியாக அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது அணைக்கான நீர்வரத்து 8,612 கனஅடியிலிருந்து 9,709 கனஅடியாக அதிகரித்திருக்கிறது. அணையில் நீர்மட்டம் 92.33 அடியாகவும், நீர் இருப்பு 55.35 டிஎம்சி ஆகவும் இருக்கிறது. தற்போது அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டாலும், 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. குறுவை சாகுபடிக்கு 100-120 நாட்கள் வரை தண்ணீர் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.