தடை நீங்கியது… அம்பை, பெருந்துறையில் விரைவில் இடைத்தேர்தல்… – Kumudam

Spread the love

சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, கூட்டணி அரசை அமைத்தது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், தவெக அரசு பொறுப்பேற்ற உடனே, அதிமுகவிலிருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். மதுராந்தகம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மரகதம் குமரவேல், பெருந்துறையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியில் இருந்து தேர்வான சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இசக்கி சுப்பையா ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்.

மேலும், திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்தத் தொகுதிகள் காலியாகின.

இதனைத் தொடர்ந்து, விராலிமலையில் இருந்து சி. விஜயபாஸ்கரும், கரூர் தொகுதியில் இருந்து எம்.ஆர். பாஸ்கரும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த நிலையில், அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிந்த உடன் கட்சி மாறியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்தன. அவர்களது வெற்றியை எதிர்த்தும், இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன.இதனால், காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த சூழலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில், அதிமுகவிலிருந்து விலகி தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியில் இருந்தும், சத்யபாமா தாராபுரம் தொகுதியில் இருந்தும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, காலியாக இருக்கும் மற்ற தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்கக் கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதித்து ஜூலை 10-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

தடையை நீக்கக் கோரி, முதல்வர் விஜய் மற்றும் ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், அம்பாசமுத்திரம், பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தத் தீர்ப்பளித்துள்ளது.திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்குத் தேர்தல் வழக்கு முடிந்த பிறகே இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் இந்த இரண்டு தொகுதிகளுக்கும், வி.எஸ். பாபு காலமானதால் காலியாக உள்ள கொளத்தூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *