வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
காலம்… 30 கொ.மு. (கொரோனாவிற்கு முன்!)
இலக்கியாவிற்கு வயது 7. தில்லை அவள் ஊர்.
அப்பா சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். கார்த்திகை மாதம் மாலை அணிந்து, நேர்த்தியாகவே விரதமிருந்து, பார்த்த சாரதியின் மைந்தனை கடந்த ஒரு தசாப்தமாய் தரிசித்து வருபவர்!
அண்ணன் பரதன். இலக்கியாவை விட ஒன்றரை வருட மூப்பு.
அண்ணன் அப்பாவுடன் சபரி மலைக்கு கைகோர்த்து மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இவ்வருட யாத்திரையில் அடம் பிடித்து, இடம் பிடித்தாள் இலக்கியா. அம்மாவும், “இப்ப அவ வந்தா தானங்க…பெரிய பிள்ளை ஆயிட்டா, சபரி மலைக்கு வர முடியாதே!” என்று சிறப்பாக சிபாரிசு செய்திருந்தாள்.
மாலை போடும் முதல் நாள். அம்மா பூஜை சாமான்களை பரணிலிருந்து எடுத்து சுத்தப்படுத்தி வைப்பது வழக்கம்.
இலக்கியா, ஆர்வ மிகுதியில் அதிலிருந்த ஒரு டிரங்க்குப் பெட்டியை முதலில் திறந்தாள்.
“ஐஐ…நா இந்த ஐயப்ப டாலர் மாலய இப்ப்ப்பவே போட்டுக்றே மா” என்று கழுத்து வரை எடுத்துச் சென்றவளை…”நோ!”, எனக் கையைப் பிடித்து நிறுத்தினாள் அம்மா.
“ம்ஹூம், முறப்படி… நாளைக்கு அப்பா போட்டு விடுவாங்க…ஐயப்ப சாமி, உன் குண்டூஸ் (இலக்கியா தன் தெய்வீக ஆசை நாயகன் விநாயகருக்கு வைத்திருந்த செல்லப் பெயர்!) மாதிரி இல்ல… ரொம்ப ஸ்டிரிக்ட்!… சிரத்தையோட ரூல்ஸ்ஸ ஒழுங்கா ஃபாலோ பண்ணனும்! அப்ப தான் சிரமமில்லாம மலை ஏறி அவரை நல்லா பாக்க முடியும்” என்றாள், ஐயப்பன் சுவாமி படத்தை தூசிதட்டியபடி…
பின்னால் நின்ற அனுபவசாலி அண்ணன்,
குசும்பாய், “உன்னாலல்லாம் சபரி மல ஏறவே முடியாது…ஏஏஏழு மயில் தூரம்…கரடு முரடா குண்டுங்குழியுமா இருக்கும்…ம்ம் ன்னு ஸ்டார்டிங்லயே அழுதுறுவ நீல்லாம்”, என்று சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்தான்.
“பாரும்மா…”, என்று வழக்கம் போல் சிணுங்கினாள். “நீ சும்மா இருடா…அதெல்லாம் ஒன்னும் இல்ல. அவ ஈசியா ஏறிடுவா”, என்றது அந்த வுமன் பவர்.
மறுநாள் அப்பா கோவிலுக்குச் சென்று குருசாமியிடம் ஐயப்ப மாலை அணிந்து வந்து, வீட்டில் பரதனுக்கும் இலக்கியாவிற்கும் அவர் கையால் மாலையைப் போட்டுவிட்டார்.
108 சரணங்களை அப்பா அண்ணன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தாள் இலக்கியா. அம்மா சமிக்ஞையில், நாம் பிறகு கூறலாம் என்றாள். ஒப்புக்கொண்டு தினமும் மாலை அம்மா ஒவ்வொறு சரணமாய்ச் சொல்ல, வழிமொழிந்தாள் இலக்கியா.
சபரிமலை பயணம் மதுரையில் உள்ள இலக்கியாவின் அத்தை வீட்டில் துவங்கும். எனினும், 48 நாட்கள் விரதத்தினூடே, சிதம்பரம் இல்லத்தில் ஐயப்பன் பூஜை வெகு விமர்சையாக நிகழ்த்துவது அவர்கள் வழக்கம். ஊரிலுள்ள நண்பர்கள், அண்டை அயலார் என ஐந்நூறு பேர் கிட்ட வந்துடும்!

ஐயப்பன் பூஜைக்கென பதினெட்டு படியை ஆசாரி வைத்து அவ்வளவு அழகாக செய்திருப்பார்கள். அதில் முழுக்க தங்க கவசம் சாத்தியதுபோல், அம்மா கோல்டு கலர் பேப்பரால் ஒட்டி இருப்பாள். அதில் இருபுறமும் நெய்தீபம் ஏற்ற பித்தளையில் அவ்வளவு நேர்த்தியான விளக்குகள். அதை மாட்ட சிறு ஆணிகளை ஆசாரியிடம் சொல்லி அடித்திருந்தார்கள். ஒவ்வொரு படியின் இருபுறமும் ஒற்றை சிவப்பழகி ரோஜாப்பூவும், மஞ்சளழகி துளுக்கு சாமந்தியும் சீராக அடுக்கப்படும். கீழே கேரள ஸ்பெஷல் குருவாயூர் விளக்குகள்…மூன்றாய்ப் பிரியும் ஒன்று நடுவே…தனி விளக்குகள் இருபுறமும் துணைநிற்க… அந்த தீப ஜுவாலைகள் அனைத்தும் தங்கப் படிகளில் மினுமினுக்க, சபரிமலை பதினெட்டுப் படியின் அழகை இங்கேயே இலக்கியாவின் இல்லத்தில் காணலாம்!
படிகளின் உச்சியில், மேசை மீது ஐந்து கரத்தான் உடனிருக்க, ஐயன், அலங்காரப் பிரியன் அழகாய் வீற்றிருப்பார்.
பூஜைக்கென, தனி சமையல் கூடாரம் அமைப்பார்கள்.
அதில் சங்கரையர் சமையல் களத்தில் இறங்கினால், அதன் மணத்திற்கும் சுவைக்கும் மயங்கி, ஐயப்பனே பஜனையை விட்டுவிட்டு இங்கே ஓடி வந்துவிடுவார்!
அம்மா அவள் பங்கிற்கு…நெய்யபிஷேகப் பிரியரின் நெய்வேத்யத்திற்கு நெய் சொட்டச் சொட்ட அக்காரவடிசல் செய்து ஐயப்பனை அங்கு ஈர்ப்பார்!
இதற்கிடையில், இருநூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், “பகவான் சரணம், பகவதி சரணம்”, “சபரி மலையில் வண்ணச் சந்த்ரோதயம்” என பக்க வாத்தியங்கள் முழங்க இறைவனை அவர்கள் பக்கம் இசையால் ஈர்த்துக் கொண்டிருப்பர்!
ஐயப்பன் பாடு திண்டாட்டம் தான்! எங்களுக்கோ கொண்டாட்டம் தான்!
இவை அனைத்தையும் ரசித்த வண்ணம் இங்குமங்குமாய் சுற்றித்திறிந்தாள் இலக்கியா. சமையலறை சென்று வடையைச் சுடலாம் (திருடலாம்) என்று
அண்ணனுடன் கூட்டுக்களவாணியாய் கைகோர்த்தாள்.
அம்மா சுவாமிக்கு படைக்கும் வரை பொறுத்திருக்கச் சொன்னாள். “நாங்களும் மாலை போட்ருக்கோம். நாங்களும் இப்ப ஐயப்ப சுவாமிஸ் தான்” என அண்ணன் சொல்லியபோது … உள்ளுக்குள் ஜில்லென்று இருந்தது இலக்கியாவிற்கு!! 32 பல்லும்…சாரி…அப்போது 24 தான்…அத்தனையும் காட்டி “இஈ” என்றாள் இலக்கியா!
ஐயப்பன் பூஜை களை கட்டியது. இறுதியில், “ஒண்ணாம் திருப்படி சரணம் பொன்னயப்பா, சுவாமி பொன்னயப்பா…” எனத் துவங்கி படிப்படியாய் எண்ணிக்கையோடு சேர்ந்து பாட்டும், வேகமும், உற்சாகமும், பக்தியும் உச்சம் தொட்டது…
உச்சம் தொட்ட உணர்ச்சி, உருகி, கரைந்து, சரணம் அடைந்து, சாந்தம் பெற்றது ஹரிவராசனத்தில்!
மதுரையை அடைந்ததும் அத்தை பிள்ளைகளுடன் சேர்ந்து விரதம் பற்றிய விவாதங்கள் அரங்கேறும்.

“நீ ஸ்கூலுக்கு ஷூ போட்டுட்டு போனியா?! நா போடலப்பா..!” என்ற பந்தாக்களில் துவங்கும்!
மதுரையில் வடக்கு மாசி வீதியில் அத்தை வீடு. மாமா தான் ஆஸ்தான தலைமை குருசாமி. சபரிமலைக்கு தொடர்ந்து 18 ஆண்டுகள் சென்று, தென்னங்கன்றும் சமர்ப்பித்து, அடுத்த ரவுண்டில் நான்காவது வருடம் அவருக்கு! எங்களோடு சேர்த்து, பயணிக்கவிருக்கும் 200 ஐயப்ப சாமிகளுக்கும் அவர் தான் குருசாமி.
இருமுடி கட்டும் சடங்கில் பல நுட்பங்களும் சம்பிரதாயங்களும் உண்டு. நெய் தேங்காய்யும், அரிசி, காணிக்கையோடு இரு சிறிய பைகள் தனித்தனியே கட்டப்பட்டு (அதனால் அதன் பெயர் ‘இரு’முடி!), ஒருசேர ஒரு பெரிய பையில் ஒன்றாக்கப்பட்டு ஒவ்வொரு சுவாமியின் சிரம் ஏறி சபரியில் ஐயனுக்கு சமர்ப்பிக்கப்படும்.
இருநூறு இருமுடிகளும் சிரம் ஏறும் வரை, அங்கே ஒரு தீபாராதனைத் தட்டில் சூடம் எரிந்த வண்ணம் இருக்க வேண்டும். அந்த ஆகச்சிறந்த, கடின, கவனம் சிறிதும் பிசகக் கூடாத பெருங்காரியத்தை, சிறார் சாமிகள் குழுவிடம் ஒப்படைத்து விடுவார் பெரிய குருசாமி, இலக்கியாவின் மாமா!
அந்த அரந்த வாள் குழு முழு சிரத்தையோடு களமிறங்கும். முதலில் யார் சூடத்தை போட வேண்டும், அடுத்த பொறுப்பு(முன்பு வைத்தது தீரும் தக்க தருணம் பார்த்து அடுத்த சூடம் வைப்பது) யாருடையது, இடையே அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வைக்க மறப்பின் என்ன தண்டனை, அடிக்கடி சில்லரை வேலைகளுக்காக எவரேனும் அழைத்தாள் யார் போக வேண்டும், இப்படி பல பெரிய தீர்மானங்களை குழுவின் மூத்த தலைவர் ஆறாம் க்ளாஸ் வெங்காயம்(இயற்பெயர் சபேஷ்), இலக்கியாவின் அத்தை மகன் முடிவெடுப்பார்!!
“அங்க என்ன வேடிக்க? இங்க சூடம் தீரப் போகுது” என்று தலையில் அண்ணன் கொட்டு வாங்கியதைக் காணும்போதே இலக்கியா உஷாராகிவிடுவாள்!
கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாத குறை தான்.
இடை இடையே அந்த கூட்டம் அடிக்கும் நல்ல(?) ஜோக்குகளுக்குக்கூட குனிந்த தலை நிமிராமல் சிரித்துக்கொண்டே கவனமாக இருந்தாள்.
இலக்கியாவின் அப்பாவிற்கும், அண்ணனுக்கும் இருமுடி கட்டும் போதே, அதுவரை அடுப்படியில் அத்தைக்கு ஒத்தாசையாய் இருந்த அம்மாவும் பாட்டியும் அவ்விடம் வந்து விட்டனர். குடும்ப உறுப்பினர்கள் சபரிமலை செல்லும் சுவாமியின் இருமுடியில் அவர்கள் கையால் அரிசியும், காணிக்கையும் போடுவது வழக்கம்.
இலக்கியாவை குருசாமி ஐயா அழைத்து, அமர்த்தி சரணம் சொல்லிக்கொண்டே கடகடவென இருமுடியை தயார் செய்தார். “சுவாமியேயயய்…” என்று அவர் சொல்ல, கூடியிருந்த அத்துனை பக்தர்களும் “சரணம் ஐயப்போ!” கோஷம் எழுப்ப, அந்தச் சின்ன கன்னியான ‘கன்னி’ சாமியின் சிரம் ஏறியது இருமுடி. புளகாங்கிதம் அடைந்தாள் இலக்கியா! இன்னதென்று சொல்லத் தெரியாத உணர்வு அது அவளுக்கு…புது அனுபவம்.
சற்று நேரத்தில் எல்லாம் இருமுடி அனைவருக்கும் கட்டப்பட்டு கீழே புனிதப் பயணித்திற்கான பேருந்து தயாராக நின்றது. தல வெங்காயம், அண்ணன் பரதன், கடைக்குட்டி கருணா, இலக்கியா என நால்வர் குழு உட்பட!
“பேருந்தில் அப்பாவுக்கு அருகில் உட்காரலாமா? அல்லது கிண்டல் கேலிகளை பொறுத்துக்கொண்டு இந்த பசங்க டீமில் சேரலாமா?”, என்று ஒரே கன்ஃபூஷன் இலக்கியாவிற்கு! ” சரி, ஒரே பேருந்து தானே. இங்கும் அங்குமாய் இருந்து கொள்ளலாம்”, என்று மனதை சமாதானப் படுத்திக்கொண்டே தலையில் இருமுடியை இருகப்பற்றிக் கொண்டு நின்றிருந்தாள்.
பேருந்து ஏறும் முன்பு, அனைவரும் இருமுடியுடன் நிற்க, அத்தையும் பாட்டியும் வந்து ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைப்பார்கள். ஆரத்தி எடுத்ததும், சடாரென்று பாட்டியும், அம்மாவும் இலக்கியாவின் காலைத் தொட்டு வணங்க…ஒன்றும் புரியாமல் திக்குமுக்காடிப் போனாள் அந்த கன்னி சாமி!! பாட்டி, “நீயும் இப்ப ஐயப்ப சாமி தான். அதான் உன்ன கும்புடுறோம்” என்றதும் ஏகப் பெருமிதம் இலக்கியாவிற்கு!! ஜென் – சி பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் ‘செம கெத்தாக’ இருந்தது அவளுக்கு!
பாடிப் பரவசமாகி, சேகர் சாமியின் “பொய்யின்றி மெய்யோடு, சபரி மலையில் வண்ணச் சந்த்ரோதயம்” பாடலுக்கு உருகி, கை வலிக்க வலிக்க ஜால்ரா அடித்து, இடை இடையே நால்வர் கூட்டணி கூடிச் சிரித்து சிரித்து பேசி, அசந்து போனாள் இலக்கியா.
வழியில் குருவாயூர், காலடி, சோட்டானிக்கரா என பக்தி வெள்ளத்தில் அனைவரும் இருந்தாலும் வெங்காயம் செய்த ஒரு வேலை தான் மொத்த குழுவினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!!
பேருந்தில் குருவய்யர் தலைமையில் ஒரு சமையற் குழு அவர்களுடன் பயணித்து ஆங்காங்கே சுடச்சுட உணவு வகைகளை சமைத்துப் பறிமாறுவது வழக்கம்.
இரவு 9 மணி. குருவாயூர் கோயிலில் தரிசனம் முடித்து திரும்பினால், குருவய்யர் சுடச்சுட புஃப் என்று பூரியும், ப்ரமாதமான கிழங்கும் பரிமாறிக் கொண்டிருந்தார். கிழங்கில் பச்சைமிளகாய் வாசனையும், மஞ்சள் தூள் நெடியும் அனைவரையும் வசியம் செய்தது.
வழக்கம் போல் நாங்கள் நால்வரும் வரிசையாய் அமர்ந்தோம். வெங்காயம் தன் ஜோல்னாப் பையிலிருந்து
மெதுவாக ஒரு டப்பாவை எடுத்தான். விறுவிறுவென்று இரண்டு ஸ்பூன் வைத்துக் கொண்டான். பூரிக்கு அதைத் தொட்டு சாப்பிட்டானே பார்க்கணும்!!
“பூரிக்குமா?!!!”, என்று ஆச்சர்யத்தில் உறைந்து போனால் இலக்கியா!
மிஸ்டர் வெங்காயம் உடன்பிறந்தோர் மூவரில் கடைக்குட்டி. ஆதலால் வீட்டில் மிகுந்த செல்லம். இட்லி மிளகாய்ப் பொடி இல்லாமல் உணவு என்பதே அவனுக்கில்லை! வேளா வேளைக்கு பொடி தொட்டுத்தான் சாப்பிடுவான் என்று இலக்கியாவும் கேள்விப் பட்டிருக்கிறாள். பார்த்தும் இருக்கிறாள். “ம்ம்… கொடுத்து வச்சவன்! அத்தை அவன் இப்டி டெய்லி காரமா பொடி சாப்டாளும் திட்றதே இல்ல…நம்ம வீட்டில் இதெல்லாம் நடக்குமா?” என்று மனதுக்குள் கடுப்படித்தும் இருக்கிறாள்.
உடனே பந்தியில் எதிரில் அமர்ந்திருந்த அப்பாவிடம் அதை அவள் கத்திச் சொல்ல, அருகில் இருந்த சேகர் சாமி, “அடப்பாவி சபேஷ். சபாஷ் டா. இனிமே உன் பேரு ‘பொடி’ சாமி!” என்று பெயரிட…அனைவரும் சிரித்துக்கொண்டே “பொடி சாமி…பொடி சாமியோவ்” என்று கலாய்க்க…பொடி சாமி எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் அடுத்து பறிமாறப்பட்ட பொங்கலுக்கும் பொடி வைத்து சுவைத்துக்கொண்டிருந்தான்!
அருமை நண்பர் வாவரைத் தொழுது அடுத்து பம்பா நதியில் குளியல்.
நால்வருக்குள் ஒரு போட்டியை அறிவித்தார் பொடி சாமி. யார் மூக்கைப் பிடித்து, மூச்சை அடக்கி, தம் கட்டி தண்ணீருக்குள் அதிக நேரம் இருக்கிறார் என்று.
முதலில் சின்னப் பிள்ளை கருணா. அவன் பயத்தில் நடுங்கி உள்ளே குனிய, “ஒன், டூ, …” என்று நாங்கள் சொல்லும்போதே வெளியே வந்து விட்டான். அடுத்து இலக்கியா. தோல்வி தான் என்று நிச்சயமாகத் தெரிந்தும் வேறு வழியின்றி முங்கினாள். மல்லுக்கட்டி திணறி 28 வரை தாக்குப்பிடித்தாள்.
அடுத்து பரதனும், பொடி சாமியும் ஒரே கணக்கில் 35 வரை வர…பொடி சாமி “நோ நோ நோ. நீங்க நா உள்ள இருக்கும்போது ஸ்லோவா எண்ணுனீங்க. ச்சீட்டிங். நா எப்டியும் 38 வந்திருப்பேன். சோ, நா தான் வின்னர்” என்றான்!

சற்று நேரம் போராடிப் பார்த்த மூவரும் கடைசியில் எப்பவும் போல் ஒத்துக் கொண்டனர். “அப்போ எனக்கு தேர்ட் ப்ரைஸ்!”, என சிலாகித்துக்கொண்டாள் இலக்கியா…அந்த நால்வர் மட்டுமே பங்கு பெற்ற மாபெரும் ஒலிம்பிக் போட்டியில்!
அப்பாச்சி மேடு தாண்டி, சரங்குத்தியில் சரமாரியாக அம்பு குத்தி விளையாட்டு! அடுத்து, மலை ஏறத் துவங்கும் போதே…அடுத்த போட்டி.
போட்டியை அறிவிக்கக்கூட காலம் தாழ்த்தாமல், அடிவைத்து ஏறிக்கொண்டே…ம்ஹூம்… தாவிக்கொண்டே “யாரு ப்ஃஸ்டு ஏற்ராங்கனு பாப்போம்ம்ம்” என்று திரும்பிப் பார்ப்பதற்குள் கண்ணுக்கெட்டாத தூரம் சென்றிருந்தார்கள்…தி எக்ஸ்பீரியன்ஸ்டு, பொடி சாமியும் பரதனும்!
இலக்கியாவிற்கும் கருணாவிற்கும் ஒன்றும் விளங்கவில்லை. கால் கிணறு கூட தாண்டாத நிலையில், இலக்கியா “அப்பா கால் வலிக்குதுப்பா”, என்று ஆரம்பித்தாள். தூக்க வந்த அப்பாவை, குருசாமி மாமா, “ம்ம்…அவளா இன்னும் கொஞ்சம் ஏறட்டும். இப்போவே தூக்குனா எப்படியய்யா!?”, என்றார்.
வேறு வழியின்றி இலக்கியா ஆடி அசைந்து நடந்த போது ஒன்றை கவனித்தாள். வழியெல்லாம் சற்று களைத்து வந்த சிறார்களுக்கும், முதியோர்க்கும் இலவசமாக க்ளுக்கோஸ் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு தான். அப்பாவையும் ஏற விடாமல், கடைக்குக் கடை நின்று சுற்றுலா சென்றது போல் க்ளுக்கோஸை சப்புக் கொட்டி குடிக்க ஆரம்பித்துவிட்டாள்!
இப்படி விடாது குடித்தால்…அடுத்து என்ன? ஆம், அதே தான்! “அப்பா உச்சா வருதுப்பா…அர்ஜென்ட்” என்று பாதை முழுக்க நச்சரிப்பு.
இவளை சமாளிக்க முடியாமல் அப்பா, தன் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு கிடுகிடுவென ஏறினார். “குண்டும் குழியும்..
கண்ணுக்கு வெளிச்சம். யாரைக் காண?…சாமியைக் காண. சாமியைக் கண்டால்?…மோட்சம் கிட்டும். சாமியே…ஐயப்போ. ஐயப்போ…சாமியே!”, என்று கோஷமிட்டபடி தோள் பல்லக்கில் அப்பா தலையில் தாளம் போட்டுக் கொண்டிருந்தாள்.
இடையிடையே “மேல ரெண்டு பேரும் இன்னேரம் ஏறிருப்பாங்களோ?! ரொம்ப பண்ணிப்பானுங்களே…என்ன பண்றது? ‘நான் தானே ஒம்போது கிளாஸ் க்ளுக்கோஸ் குடிச்சேன்’னு சொல்லி சமாளிச்சுற வேண்டியது தான்” என்று மனதுக்குள் தீர்மானம் செய்து கொண்டாள்.
சபரிமலையை வெற்றிகரமாக அப்பாவும் இலக்கியாவும் ஏறிவிட்டார்கள். வழியெல்லாம் அப்பாவும் மற்ற சாமிகளும் ” மேல ரொம்ப கூட்டமா இருக்கும். அப்பா கைய விட்ற கூடாது இலக்கியா”, என்று அறிவுறுத்திய வண்ணம் இருந்தனர்.
பதினெட்டுப் படியின் கூட்ட நெரிசல் அனைவரையும் திக்குமுக்காடச் செய்தது. அதுவரை அப்பா கையை இறுகப் பற்றியிருந்தவள் அது மெல்ல நழுவுவதை உணர்ந்து பதைபதைத்தாள்…” அப்பா…அப்பா” என்று அழுது கொண்டிருக்கும் போதே படியின் ஓரங்களில் நின்றிருந்த கேரளா காவல்துறையினர் அவளை அலேக்காகத் தூக்கினர். அடுத்தடுத்த படியிலிருந்த போலீஸார் அவளை ரிலேவில் கேட்ச் செய்ய, ஒரே நிமிடத்தில் உச்சியில் இருந்தால் இலக்கியா!
வந்த நொடி அவள் கண்ணில் பட்டது… ‘தத்துவமசி’ என்ற சொல் (மந்திரம்!) அங்கே எழுதியிருந்ததைத் தான். அதை அவள் எழுத்துக்கூட்டி படித்து முடித்த போது, அப்பா நெரிசலில் சிக்கி ஒரு வழியாக மேலே வந்திருந்தார்.
அப்பா, “தத்துவமசி னா என்னப்பா?”, கேட்டாள் இலக்கியா. “அது நீயே தான். நீயாகவே இருக்கிறாய். என்னைப் பார்க்க இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறாயே…ஆனால், நீயே கடவுள்!”, என்று ஐயன் கூறுவதாக விளக்கினார். இலக்கியாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை…
கன்னிமூல கணபதி, மஞ்சமாதாவை தரிசித்துவிட்டு க்ளைமேக்ஸ் காட்சிக்கு வந்து விட்டனர். மணிகண்டனை தரிசிக்கும் பொன்னான தருணம்.
உள் சன்னதிக்குள் ப்ரவேசித்ததும் கூட்டம் பிதுங்கிக்கொண்டிருந்தது. காவல்துறையினரின் கட்டுக்கு அடங்காத நெரிசல். ஐயப்பா கோஷம் விண்ணை முட்டியது. ஐயன் கண்ணுக்குத் தெரிந்து விட மாட்டாரா? காட்சி தர மாட்டாரா? என்று எல்லோர் கண்களும் தவித்துக் கொண்டிருந்தது. உச்ச கட்டம். போலீஸ் முன்னுக்குத் தள்ளிவிடும் அந்த நொடிப்பொழுது தரிசனம் கிட்டாதா என அனைவர் முகத்திலும் ஏக்கம்! முன்னே சென்ற பலருக்கும் நேரடி தரிசனம் கிடைக்கவில்லை. ஐயனுக்கு எதிர்ப்புரம் சன்னதியில் மாட்டப்பட்டிருந்த பெரிய கண்ணாடியில் பின்புறமாக திரும்பி அவர்தம் பிம்பத்தை அதில் கண்ட நொடி மெய் சிலிர்த்து “ஐயப்பா!” என்ற கண்ணில் நீர் வர ரிவர்ஸில் நகர்ந்து கொண்டிருந்தது கூட்டம். இலக்கியா கூட்டத்திற்குள் நசுங்கிக் கொண்டிருந்தாள்.
ஒருகணத்தில் சடார் என்று இலக்கியாவைத் தன் தோள் மீது ஏற்றினார் அப்பா. “இலக்கியா சாமி தெரியுதா பாரு” என்றார். தனக்கு தெரியாவிட்டாலும் அவள் பார்ப்பாள் என்று… ஒருகணம் ஒன்றும் விளங்கவில்லை அவளுக்கு. சுதாரித்துக் கொண்டாள். உச்சி குளிர்ந்தாள்.
“சாமி தெரிஞ்சிருச்சுப்பா!!” என்றாள்.
அப்பாவிற்கு ஆனந்தம். ஐயப்ப சாமியை அவளுக்கு காட்டிவிட்டதில். அவளுக்கோ பேரானந்தம்… ஐயப்பன், தகப்பன் சாமியை அவளுக்கு காட்டிவிட்டிருந்ததில்!!
தன்னை தோள் மீது சுமந்திருந்த நடமாடும் தெய்வத்தை…தத்துவமசியின் வேறொரு கோணத்தை உணர்ந்திருந்தாள் இலக்கியா!
– அலமேலு இராமநாதன்,
கெருகம்பாக்கம்,
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.