தந்தையின் கனவு, மகளின் வரலாறு… ஜூடோவில் இந்தியாவுக்கு முதல் காமன்வெல்த் தங்கம் வென்ற அஸ்மிதா டே! | Asmita Dey make history as India’s first gold medallists in judo at Commonwealth Games

Spread the love

தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்த அஸ்மிதா, 2022-ஆம் ஆண்டு ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று, சர்வதேச அளவில் பதக்கம் வென்ற முதல் திரிபுரா ஜூடோ வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு மக்காவ் ஜூனியர் ஆசியக் கோப்பையில் தங்கமும், குவைத் ஆசிய ஓப்பனில் வெள்ளியும் வென்றார்.

அதே ஆண்டில், உத்தரப் பிரதேச காவல்துறையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் சப்-இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அந்தப் பணி அவருக்குப் பொருளாதாரப் பாதுகாப்பையும், முழுநேரப் பயிற்சிக்கான வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டு மொராக்கோவில் நடைபெற்ற காசாபிளாங்கா ஆப்பிரிக்க ஓபன் போட்டியில் தங்கம் வென்ற அவர், 2026 காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதியாகப் பிடித்தார்.

அஸ்மிதா

அஸ்மிதா
Eranga Jayawardena

தந்தையின் இழப்பும், மீண்டெழுந்த தாயின் ஊக்கமும்

ஆனால், இந்த வெற்றிக்கான பாதை எளிதாக இருக்கவில்லை. 2025 டிசம்பரில் அவரது தந்தை அர்ஜுன் குமார் டே திடீரென பக்கவாதத்தால் காலமானார். சைக்கிள் பழுதுபார்க்கும் தொழிலில் இருந்த அவர், அஸ்மிதாவின் விளையாட்டுப் பயணத்தில் தூணாக நின்றவர். முழுநேரப் பயிற்சி, மருத்துவச் செலவுகள் என மகளுக்கு உறுதுணையாக இருந்த தந்தையின் திடீர் மறைவு, அஸ்மிதாவை மனதளவில் உலுக்கியது.

தந்தையின் மறைவுக்குப் பிறகு, சில நாள்கள் SAI போபால் மையத்தின் பயிற்சியிலிருந்தும் விலகியிருந்தார். அந்தக் காலகட்டத்தை நினைவுகூர்ந்த அவர், “எல்லாமே முடிந்துவிட்டது என்று நினைத்தேன்” என்று கண்கலங்கினார். ஆனால், அவரது தாயின் உறுதுணையும் ஊக்கமும்தான் மீண்டும் அவரை ஜூடோ களத்திற்குத் திரும்ப வைத்தது.

“தந்தை உன் வெற்றிக்காகச் செய்த தியாகங்கள் வீணாகக் கூடாது” என்ற தாயின் வார்த்தைகள் அவருக்குள் புதிய பலத்தைக் கொடுத்தன; மீண்டும் தேசிய முகாமில் இணைந்து பயிற்சியைத் தொடங்கினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அஸ்மிதா

அஸ்மிதா
Eranga Jayawardena

கிளாஸ்கோ மேடையில் தங்கம் வென்ற விதம்

கிளாஸ்கோவில் நடைபெற்ற மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு போட்டியில், அஸ்மிதா காலிறுதியில் ஸ்காட்லாந்தின் ஈவா ஈவிங்கை ‘ஐப்போன்’ (Ippon) முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில், நான்கு முறை பிரிட்டிஷ் சாம்பியனான சம்மர் ஷாவை எதிர்கொண்டார்.

கடும் சவாலாக அமைந்த அந்த ஆட்டம் ‘கோல்டன் ஸ்கோர்’ (Golden Score) வரை நீடித்தது. கூடுதல் நேரத்தில் அவர் பெற்ற ‘யூகோ’ (Yuko) புள்ளியின் மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இறுதிப்போட்டியில் கனடாவின் ஹைடி குவாக்கை எதிர்கொண்ட அஸ்மிதா, ஆட்டத்தின் தொடக்கத்தில் பின்தங்கினார். ஹெய்டி குவாக் முதலில் ‘யூகோ’ புள்ளி பெற்றதுடன், அஸ்மிதாவுக்கு ‘ஷிடோ’ (Shido) எச்சரிக்கையும் வழங்கப்பட்டது. இருப்பினும், பதற்றமடையாமல் தனது ஆட்ட உத்தியை மாற்றிய அவர், மூன்றாவது நிமிடத்தில் ‘யூகோ’ பெற்று கணக்கைச் சமன் செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட நேரம் சமநிலையில் முடிவடைந்ததால், போட்டி மீண்டும் ‘கோல்டன் ஸ்கோர்’ முறைக்குச் சென்றது. கூடுதல் நேரம் தொடங்கி வெறும் 25 விநாடிகளிலேயே அஸ்மிதா வெற்றிக்கான ‘யூகோ’ புள்ளியைப் பெற்று, 2-1 என்ற கணக்கில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். காமன்வெல்த் வரலாற்றில் இந்தியாவின் முதல் ஜூடோ தங்கப் பதக்கம் அதிகாரப்பூர்வமாகப் பதிவானது.

வெற்றிக்குப் பிறகு பேசிய அஸ்மிதா, “நான் வெல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருந்தது” என்றார். அந்த அசைக்க முடியாத நம்பிக்கையே, 35 ஆண்டுகளாக இந்திய ஜூடோ எதிர்பார்த்திருந்த வரலாற்றுச் சாதனையை நனவாக்கியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *