தனிநபர் 4.5 லிட்டர் மது வைத்து கொள்ள விலக்கு: பாண்டிச்சேரிக்கு பொருந்தது, உயர்நீதிமன்றம் உத்தரவு  – Kumudam

Spread the love

மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ஆந்திர மாநிலத்திலிருந்து 3.4 லிட்டர் மதுபானத்தை விற்பனைக்காக கொண்டு வந்ததாக, எளாவூர் சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் தங்கள்மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும்,

 தமிழ்நாடு அரசாணையின் படி 4.5 லிட்டர் வரை மதுபானத்தை தனிப்பயன்பாட்டிற்காக வைத்திருக்கலாம் என்றும், தாங்கள் கொண்டு வந்த மதுபானம் தங்களின் சொந்த பயன்பாட்டிற்காகவே என்றும் எனவே இந்த  வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தனர்.இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், புலன் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் தமிழக அரசின் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னாவின் முறையீட்டின் பேரில், இந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக நீதிபதி நிர்மல் குமார் எடுத்துக்கொண்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில் மனுதாரர்கள் அனுமதிக்கப்பட்ட அரசாணையின் படி 3.4 லிட்டர் மட்டுமே கொண்டு வந்ததாகவும், நீதிமன்றத்தின் முன்தீர்ப்புகள் மற்றும் 4.5 லிட்டர் தனிப்பயன்பாட்டு விலக்கு அடிப்படையில் இந்த முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா 4.5 லிட்டர் விலக்கு அரசாணை என்பது தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,

புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மதுபானங்களுக்கு எந்த வகையிலும் பொருந்தாது என்றும் வாதிட்டார். இதற்கான விளக்கங்களை உள்துறை செயலாளர் ஏற்கனவே வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், முந்தைய தீர்ப்புகள் இந்த அம்சத்தை கருத்தில் கொள்ளாமல் வழங்கப்பட்டதாகவும், அவை இவ்வழக்கிற்கு பொருந்தாது என்றும் தெரிவித்தார்.அத்துடன், பாண்டிச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 4.5 லிட்டர் வரை மதுபானம் கொண்டு வரலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக சமூக ஊடகங்களில் தவறாக பரவிய  தகவல்களையும் சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார் 4.5 லிட்டர் தனிப்பயன்பாட்டு விலக்கு அரசாணை என்பது தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தீர்ப்பளித்து, மனுவை தள்ளுபடி செய்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *