அபரிமிதமான திறன், அசாத்திய வியூகம் என எல்லாம் சேர்ந்துதான், உலகம் வியக்கும் சூப்பர் பவர் சாம்ராஜ்ஜியத்தை கட்டமைக்க ஒரு தொழில்முனைவோருக்கு உதவும். ஆனால், தனிமனித வாழ்வில் தடம் மாறிப்போகும் சூழலில் எத்தனை பெரிய ஆற்றல் மிக்க தலைவனும் தடுமாறிப் போகும் நிகழ்வுகளையே வரலாறு நமக்கு உரக்கச் சொல்கிறது.
தலைவன் ஒழுக்கம் தவறிய சூழலில் சரிந்த சாம்ராஜ்ஜியங்கள் ஏராளம். ராஜபாட்டை நடத்தி வந்த எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்கள் தலைவனின் தவறான நடத்தைகளால் காணாமல் போன நிஜக் கதைகள் பல நமக்குப் பாடங்களாக நம்மிடம் இருக்கின்றன.
தனிமனித ஒழுக்கம் தவறியதால் தடுமாறிய சாம்ராஜ்ஜியங்களில் சமீபத்திய உதாரணம் என்விடியா. டிஜிட்டல் மாயாஜாலத்தின் மொத்த உருவமாக உருவெடுத்திருக்கும் ஏஐ துறையின் உயிர்நாடியாகத் திகழும் நிறுவனம் என்விடியா.

உலகிலேயே சந்தை மதிப்பில் முதல் வரிசை நிறுவனம்… அமெரிக்கப் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஆற்றல் பெற்ற நிறுவனம் இது.
இந்த நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜென்சன் ஹுவாங் ஏஐ சிப் தயாரிப்பின் டெக்னாலஜி கிங் என்கிறார்கள். உலகையே கைக்குள் வைத்திருக்கும் ஒரு முக்கியமான துறையின் ஜாம்பவான் எனக் கூறப்படும் ஜென்சன் எத்தனை ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும்?!
அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பையே அசைத்துப் பார்க்கும் அளவுக்கான ஜென்சனின் நடத்தை, வலிமைமிக்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு முக்கியமான பாடம் எனலாம். பெண் தொடர்பு என்பது இதில் பேசப்படும் ஒரு கருவி. உலகையே ஆளும் ஒரு துறையில் நிகழும் சர்வதேசப் போட்டியில் பின்னப்பட்ட சதிவலையில் இத்தனை சக்தி வாய்ந்த புத்திசாலி சிக்கியது எப்படி, ஏன் என்பதே ஏஐ துறை பற்றி அடிப்படையே புரியாதவர்களின் கேள்வியும். தனிமனித ஒழுக்கம் தவறிய நடத்தை, நமக்கு உணர்த்தும் லீடர்ஷிப் பாடங்கள் என்னென்ன..? மனிதவளத் துறை நிபுணர்கள் பலரும் சுட்டிக்காட்டும் நிறுவனத் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய 10 லீடர்ஷிப் பாடங்களைப் பார்ப்போம்.
1. தனிப்பட்ட பலவீனம், நிறுவனத்தின் பலவீனமாகும்!
ஒரு நிறுவனத்தின் தலைவர் தனிப்பட்ட வாழ்க்கையில் எடுக்கும் தவறான முடிவு, அவருடைய சொந்தப் பிரச்னையாக இருப்பதில்லை என்பதுதான் பல நிகழ்வுகள் சொல்லும் உண்மை. அவரைச் சார்ந்த நிறுவனத்தின் பெயர், பங்குதாரர்களின் நம்பிக்கை, ஊழியர்களின் எதிர்காலம் எனப் பலவற்றையும் அது பாதிக்கக்கூடும். தலைமைப் பொறுப்பு என்பது மாண்பு சிதையாமல் இருக்க வேண்டுமானால், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொறுப்புடன் நடந்துகொள்வது மிக முக்கியம்.
2. திறமை மட்டும் போதுமானதல்ல..!
தொழில்நுட்ப அறிவு, புத்திசாலித்தனம், வியாபார வியூகம், சந்தையை முன்கூட்டியே கணிக்கும் திறன் என எல்லாமே ஒரு தலைவருக்கு இருக்கலாம். ஆனால், சுய கட்டுப்பாடு இல்லையென்றால் அந்தத் திறமைகளால் பயன் இல்லாமல் போய்விடும். திறமையால் உயரலாம்; ஆனால், ஒழுக்கத்தால்தான் அந்த உயரத்தைத் தக்கவைக்க முடியும் என்பதே முக்கியமான பாடம்.

3. அதிகாரத்துடன் சுய கட்டுப்பாடும் முக்கியம்!
ஒரு சாதாரண ஊழியர் செய்யும் தவறு அவருக்கு பாதிப்பைத் தரலாம்; குடும்பம் பாதிக்கப்படலாம். ஆனால், ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்குத் தலைமை தாங்கும் ஒரு தலைவர் செய்யும் தவறு, ஒட்டுமொத்த நிறுவனத்தையே பாதிக்கக்கூடும். பல ஊழியர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றிவிடும். அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்தால், அது அவருக்கும், அவருடைய நிறுவனத்துக்கும், நிறுவனத்தைச் சார்ந்த ஊழியர்களுக்கும் தீங்காக அமைந்துவிடும். உச்சத்தில் இருப்பவர்களுக்கு சுய கட்டுப்பாடு மிக முக்கியம்.
4. நம்பிக்கைதான் மிகப் பெரிய சொத்து!
ஒரு நிறுவனத்தின் கட்டடங்கள், தொழில்நுட்பங்கள், முதலீடுகள் எல்லாம் அதன் சொத்துகள். ஆனால், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள், ஊழியர்கள் அந்த நிறுவனத்தின் தலைமை மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் அதன் உண்மையான பலம். அந்த நம்பிக்கையை உருவாக்க பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால், அதை உடைக்க ஒரு தவறான முடிவே போதும். எனவே, நம்பிக்கைக்கு பாதகம் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு தலைவருக்கு உண்டு.
5. கண்காணிப்பு வளையம் தவிர்க்க முடியாதது!
இன்றைய டிஜிட்டல் உலகில் ஒரு தலைவரின் பேச்சு, சந்திப்பு, நடத்தை, தொடர்புகள் என அனைத்துமே பல்வேறு கோணங்களில் கவனிக்கப்படக்கூடியவை. குறிப்பாக, சர்வதேச அரசியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நிறைந்த துறைகளில் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்கள், தங்களுடைய தனிப்பட்ட தொடர்புகள்கூட நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் நற்பெயரைப் பாதிக்கக்கூடும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
6. தனிப்பட்ட ஆசைகள் ஆபத்தாக மாறலாம்!
பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் பல்வேறு நாடுகள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பார்கள். இத்தகைய சூழலில் தனிப்பட்ட ஆசைகள், தவறான தொடர்புகள் ஆகியவை நிறுவனத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பு உண்டு என்பதைக் கவனத்தில் வைத்துச் செயல்பட வேண்டும்.
7. நெருக்கடியில் தலைமைக்கான அடையாளம்!
சாதாரண காலங்களில் அனைவருமே சிறந்த தலைவர்களாகத் தோன்றலாம். ஆனால், ஒரு நெருக்கடி உருவாகும்போது, பலரும் தலைவரின் செயல்பாடுகளைப் பற்றி கேள்வி எழுப்பும்போது, ஒரு தலைவர் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதில்தான் அவருடைய உண்மையான தலைமைப் பண்பு வெளிப்படுகிறது. தவறை மறைக்க முயற்சிப்பதைவிட, அதை எதிர்கொள்ளும் நேர்மையே தலைமைக்கான சிறந்த அடையாளம்.

8. தனிநபரைச் சார்ந்திருக்கக் கூடாது!
ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் தலைவரின் திறமையால் மட்டுமே சாத்தியமாகிறது என்ற நிலை ஆபத்தானது. தலைவர் இல்லாதபோதும் நிறுவனம் இயங்க வேண்டும். தலைவருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலும், நிறுவனத்தின் வளர்ச்சி தடையின்றி தொடரும் வகையில் அடுத்தகட்ட திறன் வாய்ந்த தலைமை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். தனிநபரை மையமாகக் கொண்ட நிறுவனத்தைவிட, திறன் வாய்ந்த குழுவை மையமாகக் கொண்ட நிறுவனமே நீண்டகாலம் நிலைக்கும்.
9. வெற்றியின் உச்சத்தில் கவனம் முக்கியம்!
வெற்றி ஒருவருக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அதே நேரம் எல்லை மீறிய குருட்டுத்தனமான நம்பிக்கையை உருவாக்கிக்கொள்வது ஆபத்து. ‘என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’, ‘என் முடிவுகள் அனைத்தும் சரியானவை’ என்ற ஆணவப் போக்கான எண்ணம் ஒரு தலைவருக்கு உருவாகும்போது, தன்னுடைய தவறுகளைக் கவனிக்கத் தவறிவிடுகிறார். வெற்றியின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு சுயபரிசோதனைதான் மிக முக்கியமான பாதுகாப்பு.
10. நிஜமான தலைவர் இதைச் செய்ய வேண்டும்!
ஒரு தலைவர் எவ்வளவு பெரிய நிறுவனத்தை உருவாக்கினார் என்பது அவருடைய வெற்றியின் அளவுகோல் அல்ல. அவர் எத்தனை பேருக்கு நல்ல வாய்ப்புகளை அளித்தார், எத்தனை பேரின் வாழ்க்கையை உயர்த்தினார், அவருக்குப் பிறகும் அந்த நிறுவனம் எவ்வளவு வலிமையாக இயங்க முடியும் என்பதுதான் உண்மையான தலைமைக்கான அளவுகோல் எனலாம்.
ஒரு வலிமை மிக்க நிறுவனத்தை உருவாக்க புதிய சிந்தனை தேவை; அதை வளர்த்தெடுக்க வியூகம் வகுக்க வேண்டும்; உச்சத்துக்குக் கொண்டு செல்ல கடின உழைப்பு வேண்டும். ஆனால், அந்த உயரத்தைத் தக்கவைத்துக்கொள்ள பலவிதமான நிர்வாக உத்திகளைக் கையாள்வதுடன், முக்கியமாக தனிமனித ஒழுக்கமும் சுய கட்டுப்பாடும் மிக மிக அவசியம்.