International
oi-Halley Karthik
பெய்ஜிங்: சீனாவின் முத்தரப்பு பேச்சுவார்த்தையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசிய விஷயங்கள் அமெரிக்காவை கொஞ்ச நேரத்தில் சூடாக்கியது. புதினின் பேச்சால், மாநாட்டின் நோக்கம் மாறிவிடுமோ என்று பல்வேறு தரப்பினரும் அச்சமடைந்தனர்.
சீனாவின் ஷென்சென் நகரில், சீன, ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிபர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்கள். பேச்சவார்த்தை தொடங்குவதற்கு முன்னர் புதின் பேசிய விஷயங்கள், அமெரிக்க தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

அதாவது இந்த பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட வேண்டும்? என்பது குறித்த எந்த அஜெண்டாவும் முன்கூட்டியே போடப்படவில்லை. ஆனாலும், உக்ரைன் விஷயம் குறித்து பேசப்படாது என்று சொல்லப்பட்டிருந்தது. ஏனெனில் உக்ரைன் விஷயத்தை பேசினால் அமெரிக்காவுக்கு எதிராகத்தான் பேச வேண்டும். 3 பேர் ஒற்றுமையாக உட்கார்ந்து பேசுவதே ரொம்ப பெரிய அதிசயம். அந்த நேரத்தில் அமெரிக்காவை டார்கெட் செய்வதை போல இருக்கும். டிரம்ப் இதை விரும்ப மாட்டார். எனவே பேச்சுவார்த்தையின் நோக்கம் மொத்தமாக சொதப்பிவிடும் என்பதால்தான் உக்ரைன் மேட்டர் பேசப்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், புதின் எதிர்பாராதவிதமாக திடீரென உக்ரைன் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், “ஒருவொருக்கொருவர் மரியாதையின் அடிப்படையில் நட்புடன் இணைந்து செயல்பட்டால், உலகப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், நிலைத்தன்மையை மேம்படுத்தவும் ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவால் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும்.
சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பேணுவதில் இந்த மூன்று நாடுகளுக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நாடுகள் என்ற அடிப்படையில் சீனாவும், ரஷ்யாவும், அமெரிக்காவும் சர்வதேச சட்ட அமைப்பைப் பாதுகாத்து வலுப்படுத்த வேண்டும். அதைவிட முக்கியம் உக்ரைன் மோதலைத் தீர்ப்பது! இதனால் நமது நாடுகளுக்கு இடையே பல பொதுவான நலன்கள் உள்ளன” என்று பேசினார்.
இதற்கு பின்னர் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் விஷயத்தை சம்பந்தப்பட்ட நாடுகள் பார்த்துக்கொள்ளும் என்று ஒரே வரியில் பதில் கொடுத்துவிட்டு.. அடுத்தடுத்த விஷயங்களை பேச தொடங்கிவிட்டார்.
நல்வாய்ப்பாக உக்ரைன் மேட்டரால், முத்தரப்பு பேச்சுவார்த்தை பெரிய அளவுக்கு பாதிக்கப்படவில்லை.
சீன அரசு ஊடகங்களின் தகவல்படி, டொனால்ட் டிரம்ப், விளாடிமிர் புதின் மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நிறைவடைந்துள்ளது.
இந்தச் சந்திப்பு உள்ளூர் நேரப்படி மாலை 5:50 மணியளவில் முடிவடைந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஏழு நிமிடங்கள் கழித்து, மாலை 5:57 மணிக்கு டிரம்ப் தனது வாகன அணிவகுப்புடன் விமான நிலையத்திற்குப் புறப்பட்டார். இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.