தனுஷின் அடுத்த மூவ் என்ன? 234 தொகுதிகளில் புதிய திட்டம்… தவெகவுக்கு நெருக்கடியா? – Kumudam

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக பெற்ற வாக்குகளில் பெரும்பகுதி விஜய் ரசிகர்களின் வாக்குகள் மட்டுமல்ல என்றும், பல்வேறு நடிகர்களின் ரசிகர்களும் தவெகவுக்கு வாக்களித்திருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் கருதுவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், தனுஷ் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கினால், தற்போது தவெகவுடன் இருக்கும் சில வாக்குகள் பிரிய வாய்ப்புள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கணக்குப் போடுவதாகத் தெரிகிறது.

‘தவெக Vs திமுக’… மாறக்கூடாத களம்?

தற்போதைய அரசியல் களத்தில் தவெகவைப் பொறுத்தவரை, விஜய்க்கு நேரடி போட்டியாக திமுக இருப்பதே சாதகமான சூழல் எனக் கட்சி வட்டாரங்களில் கருதப்படுவதாகக் கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் ஒருபுறம் இருக்க, விஜய் தனித்துவமான அரசியல் முகமாகத் தெரிந்ததாகவும், ஆனால் மற்றொரு பிரபலமான நடிகர் அரசியல் களத்துக்குள் வரும்போது அந்தச் சூழல் மாறிவிடும் என்றும் தவெக தரப்பில் சிலர் கருதுவதாகத் தெரிகிறது.

குறிப்பாக, தனுஷுக்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு, அவரது சினிமா ரசிகர் வட்டம், தலித் முகம் ஆகியவை அரசியல் வாக்குகளாக மாறினால், அது தவெகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற விவாதமும் தொடங்கியுள்ளது.

தனுஷுக்கு ஆதரவு… டெல்லி வரை தொடர்பா?

தனுஷுக்கு பட்டியல் சமூக இளைஞர்கள் மத்தியிலும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆதரவு இருப்பதாக தவெக வட்டாரங்களில் பேசப்படுவதாகத் தகவல் கூறுகிறது.

அதுமட்டுமின்றி, தனுஷின் அரசியல் வருகைக்கு டெல்லி தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கலாம் என்ற பேச்சும் அந்த வட்டாரங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

அதோடு, தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்குக் கூடும் கூட்டத்தையும் அரசியல் ரீதியான தாக்கத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதே தவெக தரப்பில் நிலவும் கணக்காகக் கூறப்படுகிறது.

234 தொகுதிகளிலும் தனுஷின் புதிய முயற்சி?

இந்நிலையில், தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகளுக்கு மத்தியில், அவரது நற்பணி இயக்கம் சார்பில் புதிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பள்ளி மாணவர்களுக்காக இலவச டியூஷன் சென்டர்களைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மையங்களில் மாணவர்களுக்கு கற்றல் வசதிகள் வழங்கப்படுவதுடன், ஏசி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்.

மாணவர்களுக்கான கல்வி உதவி என்ற பெயரில் தொடங்கப்படும் இந்த முயற்சி, தனுஷின் நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமா இந்தப் பணிகள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

விஜய்க்கு தனுஷ் போட்டியா?

விஜய் அரசியலுக்கு வந்தபோது, அவரது ரசிகர் மன்றங்கள் நீண்ட காலமாகச் செய்து வந்த நற்பணிகள் அரசியல் கட்டமைப்புக்கான அடித்தளமாக அமைந்தன. அதேபோல், தனுஷின் நற்பணி இயக்கமும் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டால், அது எதிர்கால அரசியல் பயணத்துக்கு அடித்தளமாக அமையுமா என்ற கேள்வி எழுகிறது.

தனுஷ் உண்மையிலேயே அரசியலுக்கு வருகிறாரா, வந்தால் எந்தக் கட்சியுடன் இணைகிறார் அல்லது தனிக்கட்சி தொடங்குகிறாரா, அவரது அரசியல் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் இப்போதே அரசியல் களத்தில் பேசுபொருளாகிவிட்டது. ‘தவெக Vs திமுக’ என்ற இருமுனைப் போட்டிக் களம், தனுஷின் அரசியல் வருகையால் மும்முனைப் போட்டியாக மாறினால்… விஜய்யின் வாக்கு வங்கிக்கு எவ்வளவு சேதாரம் ஏற்படும்? இதற்கான விடை, தனுஷ் எடுக்கும் அடுத்த அரசியல் அடியில்தான் இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *