தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளி மாநில ஐஏஎஸ் அதிகாரிகள்: தேர்தல் ஆணையம் முடிவு  – Kumudam

Spread the love

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்துகிறார்.

வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு QR Code மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முகவர்கள் 3 அடுக்கு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். முதல் 2 இடங்களில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை சரிபார்க்கப்படும். 3வது இடத்தில் க்யூ ஆர் கோடு ஸ்கேனிங் மூலம் அடையாள அட்டை சரி பார்க்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகளுடன் தொடங்கும். அதன் பின்னர் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முதல் சுற்று முடிவுகள் காலை 9 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிக்காக தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முன்கூட்டியே சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான மேஜைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. 

மேலும், பெரிய தொகுதிகளில் கூடுதல் மேஜைகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறையில், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு தொகுதிக்கும் வெளிமாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 234 அதிகாரிகள், தங்களுக்கான தொகுதிகளில் மே 2ம் தேதிக்குள் சென்று பணியில் பொறுப்பேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு கட்ட முடிவுகளும் இந்த பார்வையாளர்களின் ஒப்புதலுடன் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதேபோல், எந்தவித அவசர நிலை ஏற்பட்டாலும், அந்தந்த பார்வையாளர்கள் வழிகாட்டுதல் வழங்குவார்கள். இறுதி முடிவுகளும் அவர்களின் கையொப்பத்திற்குப் பிறகே வெளியிடப்படும். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *