தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் அறிவிப்பு! – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 20) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கீழ்மட்ட வளிமண்டலத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை:

தமிழ்நாடு கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் தற்போது பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

21 மாவட்டங்களில் இன்று மழை:

ஆகஸ்ட் 20-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலவ வாய்ப்புள்ளது. ஏனைய தமிழ்நாட்டிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளையும் மழைக்கு வாய்ப்பு:

ஆகஸ்ட் 21-ம் தேதி தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கலாம்:

ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. எனினும், உள் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த காலகட்டத்தில் உள் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

சென்னையில் மாலை அல்லது இரவில் மழை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

ஆகஸ்ட் 20 முதல் 22-ம் தேதி வரை தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகம் வரையிலும் வீசக்கூடும்.

இதனால் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் வானிலை எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பாதுகாப்புடன் செயல்பட அறிவுறுத்தப்படுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *