நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் தலைமை தாங்கிய இந்த விழாவில், முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. நம் மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார். அவர் பெயரில் இருக்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இந்த நிலையா? என தமிழ் ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர். இது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதுதான் என்றாலும் அப்போதே அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதை பொருட்படுத்தாமலே ஆளுநர் இவ்வாறு செயல்பட்டிருக்கிறார் எனக் கண்டனங்கள் எழுகின்றன.
இந்த நிலையில் தவெக-வின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம். எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்பு தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.” எனப் பதிவிடப்பட்டிருக்கிறது.