`தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல், கர்நாடகா ஒரு பக்கெட் நீரைக்கூட நிறுத்த முடியாது’ – துரைமுருகன் | karnataka cannot withhold even a single bucket of water without tamilnadu consent says duraimurugan

Spread the love

“மேகதாது அணையைக் கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை’’ என்று சமீபத்தில் பேசியிருந்தார் கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார்.

அவரின் இந்தப் பேச்சுக்கு தமிழகத்திலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் சம்பந்தமாக தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தனது காட்பாடி இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், “கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அமைச்சரானதில் இருந்தே மேகதாது அணையை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். `நாங்கள் கட்டுவோம்’ என்று அவர் சொல்வதே முடியாத காரியம். காரணம், காவேரி இருமாநிலங்களில் ஓடுகின்ற ஆறு. இதில், எந்தவொரு மாநிலமும் தன்னிச்சையாக அணைகளைக் கட்டுவது, நீரைத் தேக்குவது என்பது முடியாத காரியம்.

எங்கெல்லாம் இரு மாநிலங்களுக்கு இடையில் ஆறுகள் ஓடுகிறதோ, அங்கெல்லாம் பிரச்னைதான். முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா நதி உள்ளிட்ட ஆறுகளிலும் பிரச்னைகள் இருக்கின்றன. அதனால்தான் முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்துவது, புதிய அணை கட்டுவது என்பதிலும் கேரளா முடிவெடுக்க முடியாது. அது நம்மைச் சார்ந்த ஒரு பிரச்னை.

துரைமுருகன்

துரைமுருகன்

அதேபோலத்தான் காவேரியும். `காவேரியில் நாங்கள் அணை கட்டுவோம்’ என்பதே அபத்தம். அதற்கு வாய்ப்பிருந்தால், இந்நேரம் கட்டியிருப்பார்கள். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டின் ஒப்புதல் உரிமை இல்லாமல், எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒரு பக்கெட் தண்ணீரைக்கூட அவர்களால் நிறுத்த முடியாது.

`எப்படியாவது ஒப்புதல் வாங்க வேண்டும்’ என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது நம்மிடம் கிடையாது. சட்டப்படியாக நீதிமன்ற உத்தரவும் இல்லை. நீதிபதி சொல்லிவிட்டால்கூட அணையைக் கட்ட முடியாது. அதற்கான ஆயத்தங்களை எடுக்க வேண்டும். முதலில் மத்திய நீர்வள ஆணையத்துக்குச் செல்ல வேண்டும். வனத்துறை, சுற்றுச்சூழல் அனுமதி என இவ்வளவு பிரச்னைகளைத் தாண்டி வர வேண்டும்.

ஏற்கெனவே, ஒருமுறை நம்மைக் கேட்காமல் மத்திய அரசு அனுமதி கொடுத்ததாகக் கூறி வனத்துறைக்கு அனுப்பினார்கள். அப்போது, `அனுமதி கொடுக்க முடியாது’ என்று அனுப்பிவிட்டார்கள். தடைக்கற்களைத் தாண்டுவது என்பது சுலபம் அல்ல. டி.கே.சிவக்குமார் ஆர்வத்தின் காரணமாகச் சொல்கிறாரே தவிர, அவரின் பேச்சை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொள்ளக் கூடாது’’ என்றார் துரைமுருகன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *