பாஜகவின் ஆதரவை ஏற்கிறதா திமுக ?
இதற்கிடையே, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுகவின் ஆதரவை பாஜக கோரியதாகவும், ஆனால் மசோதா நியாயமானதாக இருக்க வேண்டும் வெறுமனே தொகுதி மறுவரையறைக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக இல்லை என தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதான் தற்போது தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
இதுவரை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் முயற்சிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துவந்த திமுக, தற்போது “நியாயமான மறுவரையறை” என்ற நிபந்தனையுடன் அணுகுவது, பாஜகவின் நிலைப்பாட்டை நோக்கி ஒரு அடி நகர்வா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தவெகவின் முயற்சி திமுகவுக்கு அரசியல் நெருக்கடியா ?
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளையும் ஒரே மேடைக்கு கொண்டு வர முதல்வர் விஜய் முயற்சி எடுத்துள்ள நிலையில், அந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்காமல் இருப்பது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
ஒருபுறம், விஜய்யின் கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக, மறுபுறம் தொகுதி மறுவரையறை தொடர்பாக “நியாயமான மறுவரையறை” என்ற நிலைப்பாட்டை முன்வைப்பது என இருவிதமான அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறது. இதனால், “தவெக வைத்த பொறியில் திமுக சிக்கியதா?” என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
மேலும், விஜய் தலைமையிலான தவெக அரசு, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் எதிர்ப்பை நேரடியாக அரசியல் களத்தில் சவாலுக்கு உட்படுத்த முயல்கிறதா என்ற விவாதமும் உருவாகியுள்ளது. அதே நேரத்தில், திமுக தரப்போ, இது மாநிலத்தை மையப்படுத்திய அரசியல் விவகாரம் என்றும், தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதே தங்களின் முதன்மையான நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது