இன்று (ஜூலை 31) கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், பிற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1-ஆம் தேதியும் இதேபோன்ற வானிலை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், திருநெல்வேலி மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரியில் கனமழை பெய்யக்கூடும். மற்ற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பதிவாகலாம்.
ஆகஸ்ட் 2 முதல் 4-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

