PEAK சம்பவம் Loading… பார்ட்டி ஃபண்ட்டுக்கான ஆதாரத்தை திரட்டிய தவெக அரசு? அலறப்போகும் அறிவாலயம்..! – Kumudam

Spread the love

தவெக ஆட்சி அமைந்த முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது முதலமைச்சர் விஜய் முன்வைத்த ‘பார்ட்டி ஃபண்ட்’ குற்றச்சாட்டு, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 

முந்தைய ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் உள்ளிட்ட அரசுத் துறைகளின் வருவாய் மற்றும் ஒப்பந்த நடவடிக்கைகளில் இருந்து கட்சிக்காக நிதி திரட்டப்பட்டதாக முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் அவற்றை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

பார்ட்டி ஃபண்ட் என்று சொன்ன உடனே திமுக எதற்கு பயப்படுகிறது? பார்ட்டி ஃபண்ட் என்று தானே சொன்னோம், எந்த பார்ட்டி என்று நாங்கள் சொல்லவில்லையே… குற்றம் உள்ள நெஞ்சுத்தான் குறுகுறுக்கும் என்று திமுக மீது தவெகவினர் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆதாரம் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டை ஆளும் அரசு வைப்பதாக திமுக தரப்பு கூறியது. 

இந்த நிலையில், இந்த விவகாரத்தை அரசியல் குற்றச்சாட்டாக மட்டும் விட்டுவிடாமல், ஆவணங்களுடன் பதிலளிக்க தவெக அரசு தயாராகி வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதாவது, கடந்த சில ஆண்டுகளின் அரசுத் துறை வருவாய், ஒப்பந்தங்கள், நிதி பரிமாற்றங்கள் மற்றும் அரசுக் கருவூலத்திற்கு சேர வேண்டிய தொகைகள் தொடர்பான ஆவணங்களை திரட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க உள்ள தமிழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடரில், இந்த ஆதாரங்களை தவெக அரசு சமர்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் முக்கிய இடம் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் வரும் பட்ஜெட் கூட்டத்தொடர், அரசின் நிதி நிர்வாகம் மட்டுமின்றி, முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த கடுமையான அரசியல் மோதலுக்கும் களமாக மாறும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *